இங்கிலாந்தில் சந்தேக நபரை கைது செய்த முயற்சித்தபோது அந்த நபரின் கழுத்தை காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்திலும் ஜார்ஜ் பிளாய்டு கைது போன்ற சம்பவம் – சந்தேக நபரின் கழுத்தை காலால் நெரித்த போலீஸ்

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் கடையில் கள்ளநோட்டு கொடுத்ததாக ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை
போலீசார் கைது செய்ய முயற்சித்தனர்.

அப்போது ஒரு போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் தனது ழுழங்காலால் அழுத்தி அவரை எழுந்திருக்க முடியாமல் செய்தார். குரல்வளை நெரிக்கப்பட்டதால் ‘என்னால் மூச்சு விட முடியவில்லை’ என கதறிய ஜார்ஜ் அந்த இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல நாடுகளில் ’பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ பதாகைகளுடன் நடைபெற்ற இந்த போராட்டம் ஒரு பேரிக்கமாக உருவெடுத்து வருகிறது. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு கைது சம்பவம் போன்றதொரு கைது சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் இஸ்லிங்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்நகரின் இஸ்லிடோன் சாலைப்பகுதியில் சிலர் மோதலில் ஈடுபடுவதாக கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கூடியிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இங்கு நின்று கொண்டிருந்தவர்களில் கருப்பினத்தவரான ஒருவரிடம் கத்தி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த சந்தேக நபரை கைது செய்ய இரண்டு போலீசார் முயற்சித்துள்ளனர். கைதுக்கு அந்த நபர் ஒத்துழைக்க மறுத்துள்ளார். இதனால் போலீசார் அந்த நபரை வலுக்கட்டாயமாக தரையில் தள்ளி கைது செய்ய முற்பட்டனர். தரையில் விழுந்த அந்த நபரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது காலால் நெரித்துள்ளார்.

அப்போது மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட அந்த நபர் ’எனது கழுத்தில் இருந்து இறங்குங்கள். நான் தவறாக எதுவும் செய்யவில்லை’ என கூறினார். ஆனாலும், போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

போலீசார் அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து நெரித்து கைது செய்வதை அருகில் இருந்தவர்களில் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதனால் இந்த விவகாரம் இங்கிலாந்தில் பூதாகாரமானது.

இந்நிலையில், கைது நடவடிக்கையின் போது விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு சந்தேக நபரின் கழுத்தை முழங்காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவத்தின் போது அருகில் இருந்த மற்றொரு போலீஸ் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version