தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சமஷ்டி அடிப்படையிலான தன்னாட்சியே தீர்வு எனத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர்கள், அரசாங்கம் வழங்கும் தீர்வை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் பேசாமல் அமைதியாக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தமிழர்களுக்கு சமஷ்டி வழியில் தீர்வு வழங்க தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனத் தெரிவித்த அவர்கள் தனிநாடு கோரி மீண்டும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறுதான் ஓடும் என்றும் மீண்டும் அப்படியான ஒரு நிலைமை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.

ராஜபக்ஷக்களின் இந்த ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்துடனும் சிங்கள மக்களுடனும் ஒன்றிணைந்து பயணிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என்றும் இது சிங்கள பௌத்த நாடு எனவும் தெரிவித்த அவர்கள், தமிழர்கள் தனிவழியில் நிற்காமல் சிங்கள மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், பிரபாகரனின் சிந்தனையில் செயற்படுவதை தமிழ் மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி சிங்கள அமைப்புக்களால் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சமஷ்டியானது பிரிவினை அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version