லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில்,  சீனப் படைகளுடன் நடந்த மோதலை அடுத்து, இந்தியா தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில்,  இந்தியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,  மலைப் பகுதிகளில் போரிடும் ஆற்றல் கொண்ட படைகளை நிறுத்தியிருந்தது சீனா.

ஆனால், இந்தியா அங்கு நிறுத்தி வைத்திருந்ததோ, பிகார் றெஜிமென்ட் என்ற காலாட்படைப் பிரிவைத் தான்.

பிகார் றெஜிமென்ட் போன்ற காலாட்படைப்பிரிவுகள் தரைச் சண்டைகளுக்குத் தான் பயிற்றப்பட்டவை. மலைப்பகுதிச் சண்டைகளுக்காக சிறப்புப் பயிற்சிகளைக் கொண்டவையல்ல.

மலைப் பகுதியில் போரிடுவதற்கான இந்தியா சில  படைப்பிரிவுகளை உருவாக்கி வைத்திருந்தாலும், லடாக் எல்லையில் அவற்றை நிறுத்தத் தவறியதால் தான்,  சீனப்படைகளிடம் இந்தியா வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிட்டது.

கல்வான் பள்ளத்தாக்கி இந்தியப்படைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள், இந்தியர்களின் தன்மானத்தை தட்டியெழுப்பியிருக்கிறது.

இதன் காரணமாக, சீனாவுடன் பாதுகாப்பு ரீதியாக மோதுவதைவிட, பொருளாதார ரீதியாக மோதுவதற்கு முடிவு செய்திருக்கிறது இந்தியா.

ஒரு பக்கத்தில் சீனாவுடனான எல்லைகளில் படைகளை நிறுத்தி பலப்படுத்தும் அதேவேளை, அந்தமான் தீவுகளில் கடற்படைத் தளத்தை  பலப்படுத்தி வருகிறது.

இவையெல்லாம் சீனாவின் பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் நேரடியாக மோதுவதற்காக இந்தியா மேற்கொள்ளும் தயார்படுத்தல்கள். இவை எப்போது சீனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று கூறமுடியாது. வெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இவை.

போர் ஒன்று வந்தால் தான், இந்த பாதுகாப்பு கட்டமைப்புகளின் மூலம்,  இந்தியாவினால் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க முடியும்.

இந்தியாவை விட சீனா படைபல ரீதியாக வலிமையானது என்பதால்,  போர் ஒன்றை இந்தியா எதிர்பார்க்கவில்லை. சீனாவுடனான போர், கூடிய விரைவில் நடக்கும் என்றும் இந்தியா கருதவில்லை.

சீனாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்வதற்கு தயார்படுத்தல்களை மேற்கொண்டாலும்,  சீனாவுக்கு எதிரான பிரதான நகர்வாக அதனை இந்தியா கையாளவில்லை.

பாகிஸ்தானையே தனது பிரதான எதிரியாக கருதிக் கொண்டிருந்த இந்தியா, இப்போது சீனாவையே முதன்மையான எதிரியாக குறிப்பிட ஆரம்பித்திருக்கிறது.

இதற்குக் காரணம், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம் தான். கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இழப்புகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக காத்திருக்க இந்தியா தயாராக இல்லை.

எனவே தான், சீனாவுக்கு எதிரான பொருளாதாரப் போரைக் கையில் எடுத்திருக்கிறது இந்தியா.  கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியாவில் பரவலாக சீனப் பொருட்களை புறக்கணிக்கும் கோசம் வலுப்பெற்றிருக்கிறது.

இதனையே இந்திய அரசாங்கம் தமக்கு சாதகமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் நெடுஞ்சாலைத் திட்டங்களில் இருந்து சீன நிறுவனங்களை வெளியேற்றப் போவதாக அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார்.

இந்தியாவில் இருந்து சீன நிறுவனங்களை வெளியேற்றும் நடவடிக்கையானது, இந்தியாவின் துரித பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் என்றாலும், இது சீனாவுக்கே பேரிடியாக அமையும்.

உலகில் பல நாடுகளில் நெடுஞ்சாலைத் திட்டங்களை சீன நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

இந்தியா போன்ற மிகப் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் அதிகளவு திட்டங்களை ஈர்க்கவும், அதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர் வருமானத்தைப் பெறவும், சீனாவுக்கு வாய்ப்பு இருந்தது.

அந்த வாய்ப்பை பறிகொடுக்கும் நிலைக்கு சீனா இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக, இந்திய அரசாங்கம் சீனாவின் டிக்டொக் உள்ளிட்ட 59 செயலிகளை தடை செய்தது.

இது சீனா மீது மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் ஸ்ரைக் என்று இந்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த டிஜிட்டல் தாக்குதல் சீன நிறுவனங்களை மேலும் நிலைகுலையச் செய்திருக்கிறது. ஏனென்றால், இதன் மூலம் மில்லியன்கணக்கான டொலரை சீன நிறுவனங்கள் வருமானமாகப் பெற்றுக் கொண்டிருந்தன.

நெடுஞ்சாலைத் திட்டங்களில் இருந்து விலக்கப்படுவதும், டிஜிட்டல் வருமானத்தை இழக்கும் நிலை தோன்றியிருப்பதும் சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கியமான சவாலாகும்.

சீனப் பொருட்களை புறக்கணிக்கும் முடிவும் சீனாவை அதிர்ச்சி கொள்ள வைத்திருக்கிறது.

சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இந்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என சீன தூதரகம் அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் சந்தைப் போட்டி மற்றும் நுகர்வோர் நலன்களை காண்பித்து, இந்தியாவை மிரட்டும் தொனி அந்த அறிக்கையில் தென்படுகிறது.

ஆனால் இந்தியா இதனை கண்டுகொள்வதாக இல்லை. சீனாவுக்கு பொருளாதாரப் போர் ஒன்றின் மூலம் பதிலடி கொடுப்பதில் உறுதியாக இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவுக்கு எந்தளவுக்கு பங்கு இருந்ததோ, அதனைவிட பல மடங்கு பாதிப்பும் இருக்கிறது.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் 5 ரூபாவுக்கு,  சிறுவர்களுக்கான இலத்திரனியல் விளையாட்டுப் பொருட்கள் சிலவற்றை வாங்கக் கூடிய நிலை காணப்பட்டது.

அந்த 5 ரூபாவில் உற்பத்திச் செலவு, உற்பத்தியாளருக்கு கிடைக்கும் இலாபம், அதனை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரும் போக்குவரத்துச் செலவு, வரிகள் கட்டணங்கள், மொத்த வியாபாரியின் இலாபம், சில்லறை வியாபாரிக்கு கிடைக்கும் இலாபம் எல்லாமே அடங்கியிருந்தன.

இவ்வாறான ஒரு பொருளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததன் மூலம், சீனா தனது பொருளுக்காக இலாபத்தை அடைய நினைக்கவில்லை. இதன் மூலம், இந்திய சந்தையில் இருந்த உள்ளூர் உற்பத்தியாளர்களை முடக்கிக் கொண்டிருந்தது.

சில ஆண்டுகளில் இந்திய உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை கைவிட்ட பின்னர், பம்பரம் உள்ளிட்ட  இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுப் பொருட்கள் கூட சீனாவில் இருந்தே வரத் தொடங்கியிருக்கின்றன.

இவற்றுக்கு இந்தியர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்னர் குறைந்த விலையில் வாங்கிய பொருட்களுக்கும் சேர்த்தே, இப்போது விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உள்ளூர் சந்தையை செயலிழக்கச் செய்து, ஒட்டுமொத்தமாக சந்தையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதே உலகெங்கும் சீனா கையாளும் தந்திரம்.

இந்தியா போன்ற மிகப் பெரிய சந்தை வாய்ப்புள்ள ஒரு நாட்டில், சீனா புகுந்து விளையாடும் போது, மிகப் பெரியளவிலான, பொருளாதார நலன்களை அடையக் கூடியதாக இருந்தது. அதற்குத் தான் இப்போது ஆப்பு வைத்திருக்கிறது இந்தியா.

சீனாவுடன் ஆயுதங்களைக் கொண்டு மோதுவதை விட, அறிவைக் கொண்டு மோதுவதை இந்தியா விரும்புகிறது. பொருளாதாரப் போரை முன்னெடுப்பதன் மூலம் சீனாவை பின்னடைவுக்குள் தள்ள இந்தியா முயற்சிக்கிறது.

அதேவேளை, உலக நாடுகளை சீனா கடன்பொறி இராஜதந்திரத்தின் மூலம் வசப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இப்போது இந்தக் குற்றச்சாட்டு மற்றொரு பரிணாமத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளை சீனா தனது ஆயுதங்களைக் கொண்டு பலப்படுத்த தொடங்கியிருக்கிறது. இது இந்தியாவைக் கவலையடையச் செய்கின்ற  ஒரு விடயம்.

அண்மையில் பாகிஸ்தானுக்கு நான்கு நவீன ட்ரோன் விமானங்களை வழங்க சீனா முன்வந்துள்ளது. இந்த விமானங்கள், பாகிஸ்தானில் உள்ள சீனாவின் கேந்திர நிலைகளைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளன.

அதுபோல, கடந்த ஆண்டு இலங்கை கடற்படைக்கு சீனா பி-625 என்ற போர்க்கப்பலை வழங்கியிருக்கிறது.

பங்களாதேசுக்கு கடந்த 2008 இற்கும் 2018இற்கும் இடைப்பட்ட காலத்தில் சீனா 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான ஆயுதங்களை விற்றிருக்கிறது. குறித்த காலத்தில் பங்களாதேசின் ஆயுதக் கொள்வனவு உடன்பாடுகளில் இது 70 சதவீதமாகும்.

இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான மியான்மார், சீனாவின் மூன்றாவது பெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக விளங்குகிறது.

2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் விமானங்கள், போர்க்கப்பல்கள், கவசவாகனங்கள் உள்ளிட்ட 720 மில்லியன் டொலர் ஆயுதங்களை சீனாவிடம் வாங்கியிருக்கிறது மியான்மார்.

இந்த நான்கு நாடுகளுக்கும் பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கடனாக கொடுத்து, தனது பட்டுப்பாதை திட்டத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது சீனா. இது இந்தியாவுக்கு சவாலான விடயமாக இருக்கிறது.

அதனால் தான், நேரடியாக சீனாவுடன் முட்டிக் கொள்வதை விட, பொருளாதார ரீதியாக அதனுடன் போட்டி போட தாயராகிறது .

இதற்கு அமெரிக்காவின் பக்க பலம் இருப்பது கூடுதல் பலத்தைக் கொடுக்கிறது. இந்திய- சீன பொருளாதாரப் போர், பிராந்தியத்திலும் நெருக்கடியையே தோற்றுவித்திருக்கிறது. குறிப்பாக இலங்கைக்கு இது இன்னும் கூடுதலான சங்கடங்களை ஏற்படுத்தும்.

இந்தியாவின் உறவினராகவும், சீனாவின் நண்பனாகவும், இரண்டு தோணியில் பயணம் செய்வது, இலங்கைக்கு கடினமானது தான்.

Share.
Leave A Reply

Exit mobile version