இராவணன் தொடர்பான ஆவணங்கள்,புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்து இலங்கை அரசாங்கம் பத்திரிகை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ளது.
.
இலங்கை அரசு இலங்கை மன்னனான இராவணன் மற்றும் நாட்டின் விமான போக்குவரத்து வரலாறு குறித்து விரிவான ஆராய்ச்சி நடத்த விரும்புவதாக கூறப்படுகிறது.

இராவண மன்னன் மற்றும் இப்போது இழந்த வான்வழி பாதைகளில் பண்டைய ஆதிக்கம் குறித்த ஆராய்ச்சி திட்டத்தைத் இலங்கையின் சிவில் விமானசேவை அதிகாரசபை தொடங்குகிறது.

அந்த அறிக்கையின் பிரகாரம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு இராவணன் விமானத்தில் பறந்து விட்டதாகவும், உலகின் முதல் விமானி என்றும் இலங்கை நம்புகிறது.

 

பண்டைய காலகட்டத்தில் பறக்கப் பயன்படும் முறைகளைக் கண்டறிய நாடு இப்போது ஆர்வமாக உள்ளது.

ஆராய்ச்சியின் முதல் கட்டமாக, இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் பிற வரலாற்று உள்ளடக்கங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

விமானத்தைப் பறக் க விட்ட முதலாவது ஆள் இராவணன் என்பதை நிரூபிக்க அரசாங்கத்திற்கு “மறுக்கமுடியாத உண்மைகள்” இருப்பதாகத் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் துணைத் தலைவர் சஷி தனதுங்க, தெரிவித்தார்.

இராவண மன்னன் ஒரு மேதை. அவர் தான் முதலில் பறந்தார். அவர் ஒரு விமானியாக இருந்தார். இது ஐதீக கதை அல்ல.இது ஒரு உண்மை.

இது குறித்து விரிவான ஆராய்ச்சி இருக்க வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதை நாங்கள் நிரூபிப்போம், என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இலங்கை அரசு “இந்திய தரப்புக் கருத்தை” நிராகரிக்கிறது. இராவணனை ஒரு கொடுங்கோலனாக பார்க்கும் இந்தியாவைப் போலல்லாமல், இலங்கை இராவணனை ஒரு அறிஞராகவும், கனிவான ஆட்சியாளராகவும் பாராட்டுகிறது.

அவர் சீதையை கடத்திச் சென்றார் என்பதை அவர்கள் நிராகரித்து, அதனை இராவணன் தொடர்பான “இந்திய தரப்பு கருத்து” என்று முத்திரை குத்துகிறார்கள்.

பல இந்திய வேதங்கள் இலங்கையின் ஆட்சியாளரை “மகா பிராமணர்” அல்லது பெரிய பிராமணர் என்று குறிப்பிடுகின்றன.

சமீபத்தில், இலங்கை தனது முதல் விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளை ஏவியது.

இந்த செயற்கைக்கோளுக்கு “இராவணன்” என்று பெயரிடப்பட்டது. கடந்த ஆண்டு கட்டுநாயக்கவில் நடந்த ஒரு மாநாட்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வரலாற்றாசிரியர்கள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் மற்றும் புவியியலாளர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் பறந்ததாக முடிவு செய்தனர்.

இராமாயணத்தைப் பொறுத்தவரை, இராவணன் “புஸ்பக” என்ற விமானத்தைப் பயன்படுத்தினான், அதை விஸ்வகர்மா நிர்மாணித்தான்.

இதிகாசத்தின் பிரகாரம் சீதையைக் கடத்திச் சென்றபோது இராவணன் விமானத்தைப் பயன்படுத்தியிருந்தான் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version