தமிழகத்திலுள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறித்த செய்திகள் வெளியானதையடுத்து அது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.
இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் 28 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது கணவர் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் தங்களுக்கு விடுதலை அளிக்க கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுதொட ர்பாக, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஒப்புதலுக்கு கடந்தாண்டு அனுப்பி வைக்கப் பட்டது.
எனினும், இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் அவர்களது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனிடையே, வேலூர் சிறையில் பல்வேறு வகையில் துன்புறுத்தல்கள் அளிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி தங்களை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என நளினி, முருகன் ஆகியோர் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், இக்கோரிக்கை மீதும் சிறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி, திங்கள்கிழமை இரவு துணியால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நளினியின் வழக்குரைஞர் புகழேந்தி கூறியது; சிறையில் அடைக்கப்பட்டுள்ள மற்றொரு ஆயுள் தண்டனை பெண் கைதிக்கும், நளினிக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது.
இதில், அந்த பெண் கைதி அளித்த புகாரின்பேரில் ஜெயிலர் அல்லிராணி, நளினியிடம் திங்கள்கிழமை இரவு விசாரணை நடத்தியுள்ளார்.
அவரது இந்த விசாரணையால் மனஉளைச்சலுக்கு உள்ளான நளினி, தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரியவந்துள்ளது.
பொதுவாகவே, நளினி மனதளவில் திடமான பெண்தான். அவர் தற்கொலை செய்ய முயன்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
எனினும், பொதுமுடக்க தடையால் தற்போது இதுதொடர்பாக நளினியுடன் பேச இயலவில்லை. சிறை அதிகாரி களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.