கொவிட் – 19 கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் இலங்கையின் 9 வது நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 05 ஆந் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நிலையில் கட்டுப்பணங்களைச் செலுத்திய அரசியற் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்புக்கமைய நடைபெறவுள்ள தேர்தலில் 4 இலட்சத்து 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் அலுவலக அறிக்கை தெரிவிக்கின்றது.
இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 92 ஆயிரத்து 809 வாக்காளர்களும், கல்குடாத் தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்து 19 ஆயிரத்தி 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் 97 ஆயிரத்து 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதனடிப்படையில் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 65,321 வாக்காளர்களும், காத்தான்குடி பிரிவில் 31,268 வாக்காளர்களும், மண்முனைப்பற்று ஆரையம்பதிப் பிரிவில் 24,428 வாக்காளர்களும், வவுணதீவுப் பிரிவில் 22,237 வாக்காளர்களும், ஏறாவூர் நகர் பிரிவில் 26,463 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 23,092 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 28,893 வாக்காளர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரிவில் 19,442 வாக்காளர்களும், கோரளைப்பற்று வாளைச்சேனை பிரிவில் 18,518 வாக்காளர்களும், கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை முஸ்லிம் பிரிவில் 19,984 வாக்காளர்களும், கோறளைப் பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரிவில் 16,754 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவில் 16,337 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர்.
பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடிப் பிரிவில் 46,275 வாக்காளர்களும், போரதீவுப்பற்று வெல்லாவெளிப் பிரிவில் 31,459 வாக்காளர்களும், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவில் 19,337 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியடைந்திருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் 416 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு தொகுதியில் 185 வாக்குச்சாவடிகளும், கல்குடா தொகுதியில் 155 சாவடிகளும், பட்டிருப்பு தொகுதியில் 116 வாக்குச் சாவடிகளும் நிறுவப்படவுள்ளன.
தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களுமாக, 44 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதில் 3 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இறுதியில் 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், 22 சுயேச்சைக் குழுக்களுமாக 38 குழுக்கள் இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளளர்.
வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, மௌபிம ஜனதா பக்ஸ, ஜனசத பெரமுன ஆகிய 3 அரசியல் கட்சிகளினதும், அரசரெத்தினம் யுகேந்திரன், பி.மதிமேனன், மு.அ.நிசார்தீன் ஆகியோர் தலைமையிலான 3 சுயேச்சைக் குழுக்களுமே நிராகரிக்கப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய சத்தியப் பிரமாணம் சமர்ப்பிக்கப்படாமை, வேட்பு மனுவில் எட்டு அபேட்சகர்களது பெயர் குறிப்பிடப்பட வேண்டிய விடத்து 7 அபேட்சகர்களது பெயர்கள் மாத்திரம் குறிப்பிட்டமை போன்ற காரணங்களுக்காகவே இவ்வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமாகிய திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களுக்கு 304 பேர் போட்டி
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 5 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற் காக வேண்டி 304 பேர் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2015 பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, ஞானமுத்து சிறினேசன், சதாசிவம் வியாழேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், ஆகிய மூவரும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் எம்.எஸ்.எஸ். அமீர் அலியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலிஸாஹிர் மௌலானாவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் தபால்மூல வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றது.
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறை களுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பின் மூண்றாம் கட்ட வாக்களிப்பு வியாழக்கிழமை (16) அமைதியான முறையில் நடைபெற்றது.
இதன்படி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்டத்தின் சகல வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் முப்படையினர், சிவில் பாதுகாப்பு படையினரும் இந்த தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது பொது சுகாதார துறையினர் சுகாதார முறைகளை கவனிக்கும் பணிகளில் ஈடுபாடு காட்டினர்.
இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர் களும், பட்டிருப்புத் தொகுதியில் 3047 அரச உத்தியோகத் தர்களும், கல்குடா தேர்தல் தொகுதியில் 2426 அரச உத்தி யோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும் முப்படையினர் அடங்களான அரச உத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் தபால் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றது.
வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆந் திகதிவரையும் இடம்பெறும் எனவும் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் 29ஆந் திகதிக்குப்பின் தபால் அலுவலகங்களில் தத்தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளமுடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.
எது எவ்வாறு அமைந்தாலும் என்றுமில்லா வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக வேண்டி 16 அரசியற் கட்சிகள், மற்றும் 22 சுயேட்சைக் குழுக்கள் ஊடாக மொத்தம் 304 பேர் பேட்டியிட்டாலும், அனைவரும் பல பிரசார பணிகளை மேற்கொள்கின்ற போதிலும், மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பதன் மூலம் எதிர்வரும், 5 வருடங்களில் மக்களின் அபிலாசைகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொள்ளக்கூடிய தலைவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.