தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஆறாயிரத்து 988 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 6 ஆயிரத்து 737 ஆகப் பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (சனிக்கிழமை) ஒரேநாளில் அதிகபட்சமாக 89 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் மூவாயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளன.

சென்னையில் மட்டும் ஒரேநாளில் ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 93ஆயிரத்து 537 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் மொத்தமாக ஐயாயிரத்து 659 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ஏழாயிரத்து 758 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து51 ஆயிரத்து 55 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று அதிகபட்சமாக 64 ஆயிரத்து 315 பேருக்கு கொரோனா பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் சடுதியாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 22 இலட்சத்து 433ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version