ஜூலை 29ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள அம்பாலாவிற்கு வரவிருக்கும் ரஃபேல் போர் விமானங்களுடன் இந்தியா, ஃபிரான்சிடமிருந்து ஹேமர் ஏவுகணை வாங்கவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவசர காலப் பயன்பாட்டுக்கான உரிமை என்ற ரீதியில் இவை வாங்கப்படுவதாக அரசு தரப்பு கூறுகிறது

60 முதல் 70 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய இந்த ஹேமர் ஏவுகணைகளை சீனாவுடனான போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டே வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டப்படி, ரஃபேல் விமானங்களுடன் இந்த அதிநவீன ஏவுகணைகளை பொருத்தி அனுப்ப இந்திய தரப்பு கடைசி கட்டத்தில் கூறியபோதிலும், அதை பிரான்ஸ் ஏற்றுக்கொண்டதாக அரசு தரப்பை மேற்கோள்காட்டி ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஐந்து ரஃபேல் போர் விமானங்களை கொண்ட முதல் தொகுப்பு இன்னும் நான்கு நாட்களில் ஹரியாணாவில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்திற்கு வரவிருக்கிறது.

ஹேமர் ரக ஏவுகணையின் சிறப்புகள் என்னென்ன?

ஹேமர் ஏவுகணை தொலைவிலிருந்தே எளிதாகச் செலுத்தப்படக்கூடியது என்று அதைத் தயாரிக்கும் நிறுவனமான சாஃப்ரான் எலக்ட்ரானிக் அண்ட் டெஃபென்ஸ் கூறுகிறது. வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கவல்லது இது என்று கூறப்படுகிறது.

இந்த அமைப்பு வழிகாட்டல் கருவி மூலம் இலக்கை அடையக்கூடியது. எளிதாகச் செலுத்தப்படக்கூடியது.

ஒரு போதும் செயலிழக்காது. ஏவுகணையின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தொகுப்பில், ஜிபிஎஸ், அகச்சிவப்புக் கதிர், லேசர் போன்ற பல தொழில்நுட்பங்கள் உள்ளன” என்று இந்த நிறுவனம் கூறுகிறது.

ஹேமரின் உண்மையான பெயர் Armement Air Sol Modular என்பதாகும். பிரான்சின் சந்தைகளில் விற்பனைக்கு வந்த பிறகு இது ஹேமர் என்று அழைக்கப்பட்டு பிறகு அதுவே பிரபலமானது.

பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கியுள்ள போர் விமானமான ரஃபேலில், ஆகாயத்திலிருந்து ஆகாயத்திலுள்ள இலக்கைத்தாக்கும் மேடியார் என்ற அதிக தூரம் சென்று தாக்கும் ஏவுகணை பொருத்தப்பட்டுள்ளது.

இதனால், இந்தியாவின் விமானப் படை பலம் அண்டை நாடுகளை விட பல மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது.

1971ஆம் ஆண்டில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரில் இந்தியா வெற்றிபெற்றதில் விமானப்படையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய விமானப்படை பெருமளவில் விரிவடைந்துள்ளது.

குறைந்தபட்சம் 250 கிலோ எடை கொண்ட ஹேமர் ஏவுகணை ரஃபேல் தவிர மிராஜ் போர் விமானத்திலும் பொருந்தக்கூடியது.

பிரான்ஸ் தவிர, ஆசிய நாடுகளான எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகளும் ஹேமர் ஏவுகணையைப் பயன்படுத்துகின்றன.

லடாக் பிரச்சனையை அடுத்தே இந்த ஏவுகணை வாங்கப்படுகிறதா?

மலைப்பாங்கான பகுதிகள் உள்ளிட்ட எந்த வகை நிலப்பகுதியிலும் இருக்கும் பதுங்கு குழிகளிலும் இந்த ஹேமர் ஏவுகணைகள் ஊடுருவ வல்லவை என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை ஆதாரங்களை மேற்கோளிட்டுக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவின் லடாக் பகுதி இந்த விவகாரத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

சமீப காலமாக இந்தியா – சீனா இடையேயான மோதல் போக்கு நிலவி வரும் லடாக் பகுதியை கவனத்தில் கொண்டு இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா எடுத்துள்ள பல கொள்கை முடிவுகள் சீனாவைக் குறி வைப்பதாகவே உள்ளன. ஆனால், போர் தொடுப்பது குறித்த எந்த ஒரு சமிக்ஞையையும் இருதரப்பினரும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

இந்தியா சுதந்திரமடைந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு, 1962ஆம் ஆண்டு சீனாவுடன் நடந்த போரில் இந்தியா தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது.

அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நடந்த கார்கிலும் லடாக்கில் தான் உள்ளது.

தொடரும் சர்ச்சைகள்

பிரான்சில் இருந்து அறுபதாயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா 36 போர் விமானங்களை வாங்கக் கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும், விமானத்தின் உண்மையான மதிப்பு குறித்து பல சர்ச்சைகள் நிலவுகின்றன.

 

ரஃபேல் போர் விமானங்களின் விலை குறித்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. ஆனால், பாதுகாப்புக் காரணங்களால் அங்கும் விலை குறித்த உண்மைகள் வெளியாகவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி இதுகுறித்து ஒரு ட்வீட் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். “ரஃபேல் ஒப்பந்தத்தின் போதே ஹேமர் குறித்த முடிவு ஏன் எடுக்கப்படவில்லை?” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் குறைந்த விலை கொண்ட ஸ்பைஸ் மற்றும் பெவ்ஹேவ் ரக ஆயுதங்கள் குறித்து ஏன் இந்திய விமானப்படை சிந்திக்கவில்லை? இவை இந்திய விமானப்படையில் ஏற்கெனவே இருக்கின்றன” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது, இந்திய விமானப்படையில் ஏற்கனவே உள்ள ஏவுகணைகளை விட ஹேமரின் விலை அதிகமா என்று மணிஷ் திவாரி கேள்வி எழுப்புகிறார்.

2007ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் ராணுவத்தில் இருக்கும் ஹேமர், ஆஃப்கானிஸ்தான், லிபியா ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அப்போது, ஹேமர் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்டதாக இதைத் தயாரிக்கும் நிறுவனம் கூறுகிறது.

ஆனால், இந்தியா பிரான்சிடமிருந்து எத்தனை ஹேமர் ஏவுகணைகளை என்ன விலையில் வாங்குகிறது என்பது குறித்த தெளிவான விளக்கம் இல்லை.

இந்த நிலையில், சுமார் 100 ஹேமர் ரக ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் கூறுகையில், “இந்தியாவில் எல்லைப் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கான தகவல் இது – இந்தியா ரஃபேலுடன் ஹேமர் ஏவுகணைகளைப் பொருத்தியே வாங்குகிறது. எதிரியின் பதுங்கு குழிகள் கூட இப்போது தப்ப முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

 

ரஃபேலின் விலை குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை பாதுகாப்பு குறித்த விவகாரம் என்று கூறி வரும் இதே பாரதிய ஜனதா கட்சிதான் 1980களில் போஃபர்ஸ் பீரங்கிகள் வாங்கப்பட்டபோது அதுகுறித்து சர்ச்சையைக் கிளப்பியது.

அமெரிக்கா, சீனா ஆகியவற்றுக்கு அடுத்த படியாக, பாதுகாப்புத் துறைக்கு அதிகம் செலவிடும் மூன்றாவது நாடாகவும் தெற்காசியாவில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளதாக ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட் தெரிவிக்கிறது..

சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டு இது 71.1 கோடி டாலராக இருந்தது.

ஆனால், ஜவஹர்லால் நேரு காலத்தின் ஜீப் ஒப்பந்தமாக இருக்கட்டும், போஃபர்ஸ் ஒப்பந்தமாக இருக்கட்டும், இப்போது ரஃபேலாக இருக்கட்டும், இந்தியாவின் பாதுகாப்பு ஒப்பந்தம் எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது.

 

Share.
Leave A Reply

Exit mobile version