மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் முயற்சியாக, அந்த இடத்தை அரசுடைமையாக்குவதற்கு உரிமையாளர்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையாக ரூ.68 கோடியை நிர்ணயம் செய்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

போஸ் கார்டன் சொத்து தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில், கடந்த மே மாதம், வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்ற நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது எனக்கூறி அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.

ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகளான தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் ‘நேரடி வாரிசு’ என்று உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து, உயர்நீதிமன்றம் நேரடி வாரிசு என்று அறிவித்துள்ளதால், போயஸ் தோட்ட இல்லம் மட்டுமின்றி ஜெயலலிதாவின் எல்லா சொத்துகளையும் பெறவேண்டியது தன்னுடைய கடமை என்று தீபா தெரிவித்திருந்தார்.

 

தற்போது, நினைவு இல்லம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை, சென்னை மாவட்ட வருவாய் பிரிவு அலுவலகம் முடிவு செய்து, சென்னை சிவில் நீதிமன்றம் வாயிலாக செலுத்த முடிவுசெய்துள்ளது.

நில உரிமையாளராக உள்ள தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறை என மூன்று தரப்பினரிடம் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்பதால், இழப்பீட்டு தொகையை நீதிமன்றம் வாயிலாக செலுத்த முடிவாகியுள்ளது என வருவாய்துறையின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, வருவாய்துறை மூன்று தரப்பினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், ஜெயலலிதா செலுத்தவேண்டிய வருமான வரித்தொகை ரூ.36.87 கோடி பாக்கி உள்ளது என வருமான வரி துறை தெரிவிப்பதாலும், தீபா மற்றும் தீபக் நிலம் கையகப்படுத்தக்கூடாது என தெரிவிப்பதாலும், முடிவு எட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது 24,322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா நிலையத்திற்கு இழப்பீட்டு தொகையாக, 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதில் நிலத்தின் மதிப்பு, கட்டிடத்தின் மதிப்பு, அங்குள்ள மரங்களின் மதிப்பான ரூ.11,047 உள்ளிட்டவையும் அடங்கும்.

இந்த நிலையில் இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபா, “வேதா இல்லம் எங்களது பூர்வீக சொத்து.

அதை அரசுடைமையாக்கும் அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை கேட்பேன். மேலும், வேதா இல்லத்திற்கான அரசின் மதிப்பீட்டு தொகை 68 கோடி என்பது தவறானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version