அறிவியல் துறை சார்ந்த புதிய செய்தி வருவது இந்த ஆண்டு இது முதல் முறையல்ல. கொரோனா வைரஸ் உலகத் தொற்று மற்றும் பாலவன வெட்டுக்கிளிகள் என தினமும் ஏதோவொரு அறிவியல் தொடர்பான செய்தி வாழ்வைப் பிரதிபலிக்கும் காலப்பகுதியில் இருக்கிறோம்.
தினமும் அச்சத்திலும், பதற்றத்திலும் ஆழ்த்தும் உலகத் தொற்று, வெட்டுக்கிளி தொடர்பான அறிவியல் செய்திகள் மட்டுமல்ல, சில நேரங்களில் ஆசுவாசம் அளிக்கும் அறிவியல் செய்திகளும் வாழ்வில் குறுக்கிடுகின்றன. இத்தகைய ஒரு செய்திதான் ராட்சத கரப்பான் பூச்சி பற்றிய செய்தி.
இந்தோனீசிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆழ் கடலுக்கு அடியில் இந்த ராட்சத கரப்பான் பூச்சியை கண்டறிந்துள்ளனர்.
மிகப் பெரிய உருவம் கொண்ட இந்த கரப்பான் பூச்சி, தட்டையான உருவமும், மிகையான உடல் எடையும் கொண்டது.
பத்திநோமஸ் ரக்சச என்ற பெயர் கொண்ட இந்த கரப்பான் பூச்சி இந்தோனீசியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா உள்ளிட்ட தீவுகளுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் கண்டறியப்பட்டது.
கடலின் மேல் மட்டத்தில் இருந்து 957 மீட்டருக்கு கீழ் இந்த கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்தது.
இந்த வகை பூச்சி 33 சென்டி மீட்டர் நீளம் இருந்தாலே, ராட்சத பூச்சியாக கருதப்படும். மேலும் 50 சென்டி மீட்டர் நீளம் வரை வளர வாய்புள்ளது.
தற்போது இந்தோனீசியாவில் கண்டறியப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க ராட்சத கரப்பான் பூச்சி உலகின் இரண்டாவது பெரிய கரப்பான் பூச்சி என இந்தோனீசிய அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த கோணி மார்கரெத்த என்ற ஆராய்ச்சியாளர் கூறினார்.
உலகளவில் இதுவரை 7 ராட்சத மேலோட்டுயிர் வகைகள் (ஐசோபாட்ஸ்) கண்டறியப்பட்டுள்ளன.
இந்தோனீசியாவில் முதல் முறையாக தற்போது இது கண்டறியப்பட்டுள்ளது. ”இதன் மூலம் இந்தோனீசியாவின் அறியப்படாத இயற்கை வளங்கள் குறித்து நாம் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது” என விலங்கியல் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் காஹ்யோ ரஹ்மாடி கூறுகிறார்.
ராட்சத பூச்சி
ஆழ் கடலில் வாழும் பூச்சிகள் மிக பெரிய உருவத்தை கொண்டுள்ளதற்கு பின்னணியில் உள்ள காரணங்களை விவரிக்க பல கோட்பாடுகள் உள்ளன என லண்டனின் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் கூறுகிறது.
ஆழ் கடலில் வாழுவதால், அதிக ஆக்சிஜன் தேவை இருக்கும், எனவே அதிக அளவில் சுவாசிக்கும்போது உடல் பெரிதாகும், கால்களும் மிக நீளமாக வளரும் என ஒரு கோட்பாடு கூறுகிறது.
கடலுக்கடியில் உள்ள கரப்பான் பூச்சியை வேட்டையாடுவதற்கு அல்லது கொல்லுவதற்கு என எந்த உயிரினமும் இல்லை. அதனால் இவற்றால் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக உயிர் வாழ முடியும், உடலை பெருக்க செய்யவும் முடியும்.
மேலும் நண்டுகளைப் போல, கரப்பான் பூச்சிகளுக்கு உடலில் நிறைய சதைகள் கிடையாது. எனவே மற்ற கடல் உயிரினங்கள் கூட நண்டுகளை வேட்டையாடி உணவாக உண்ணும். சதைகள் இல்லாததால் கரப்பான் பூச்சியை மற்ற கடல் உயிரினங்கள் உணவாக உட்கொள்ள விரும்புவதில்லை.
பாத்தினோமஸுக்கும் பெரிய கண்கள் உள்ளன எனவே இருளில் வாழ்வதற்கும் அதன் வாழ்விடத்தை பாதுகாக்கவும் அவை உதவுகின்றன.
கரப்பான் பூச்சிகள் விசித்திரமாக தோற்றம் அளிக்கின்றன. ஆனால் அவை அவ்வளவு அச்சுறுத்தலான உயிரினம் இல்லை.
பொதுவாக ஆழ்கடலில் செத்து கீழே ஒதுங்கி கிடைக்கும் உயிரினங்களின் உடல்களை தான் கரப்பான் பூச்சிகள் நாள் முழுவதும் தேடுகின்றன.
அவற்றையே கரப்பான் பூச்சிகள் உணவாக உண்ணுகின்றன. ஜப்பானின் ஓர் ஆய்வகத்தில் வைக்கப்பட்ட ராட்சத கரப்பான் பூச்சி 5 மாதங்களுக்கு உணவு உண்ணாமலே உயிர் வாழ்ந்தது.
2018ம் ஆண்டு இரண்டு வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 63 வித்தியாசமான உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவற்றில் டஜன் கணக்கான புதிய உயிரினங்களும் அடக்கம்.
இந்த ஆராய்ச்சி மேற்கொண்ட குழு இரண்டு வகை பத்தினோமஸ்களை இந்தோனீசியாவில் கண்டறிந்துள்ளது. ஒன்று 36.3 சென்டிமீட்டர் நீளம் உள்ள ஆண் பூச்சி, மற்றொன்று 29.8 சென்டி மீட்டர் நீளமுள்ள பெண் கரப்பான் பூச்சி.
மேலும் நான்கு இளம் வயது கரப்பான் பூச்சிகளையும் அதே கடல் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் அவை சிறப்பான ராட்சத வகை உயிரினங்கள் என்ற பட்டியலில் இடம் பெறாது. இளம் வயது என்பதால், அவற்றின் உடல் உறுப்புகள் இன்னும் முழுமையாக வளரவில்லை.