ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க திறன்பேசி இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர் விவசாய கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இவரது மகன் தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு நிறைவு செய்து, தற்போது 10ஆம் வகுப்பு சென்றுள்ளார். தமிழகம் முழுவதும், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத சூழ்நிலையில், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவரின் ஆன்லைன் வகுப்பிற்கு ஸ்மார்ட்போன் தேவைப்பட்டதால், மாணவர் அவரது தந்தையிடம் ஸ்மார்ட்போன் வாங்கித் தர வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், கொரோனா தொற்று காலத்தில் வறுமை சூழல் காரணமாக அவரது தந்தையால் வாங்கித் தர முடியாத நிலை ஏற்படவே, அவரது மகன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவனை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது மருத்துவ பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் கேட்டது.

“தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர், அவரது ஆன்லைன் வகுப்பிற்குப் பெற்றோரிடம் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவரது தந்தை தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினால், சிறிது காலம் சென்ற பிறகு வாங்கி தருவதாகக் கூறினார். இதனால் மன‌முடைந்த சிறுவன், தற்கொலை செய்து கொண்டார். இதன்பிறகு மாணவனின் உடலை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது,” என காவல் துறையினர் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version