உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்திலுள்ள பிரமிடுகளை வேற்றுகிரகவாசிகள் கட்டியதாக கூறிய பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கு அந்த நாட்டு அரசு பதிலடி கொடுத்துள்ளது.
பிரமிடுகளை கட்டும் மாபெரும் பணியில் வேற்றுகிரகவாசிகள் ஈடுபட்டதாக கூறி வரும் சூழ்ச்சி கோட்பாட்டாளர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டெஸ்லா, ஸ்பைஸ்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரில் கருத்தொன்றை பதிவிட்டிருந்தார்.
ஆனால், எகிப்தின் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் அமைச்சர் இதை துளியும் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
சூழ்ச்சி கோட்பாட்டாளர்களின் கருத்து தவறானது என்பதற்கு பிரமிடுகளை கட்டியவர்களின் கல்லறைகளே ஆதாரம் என்று அவர் கூறுகிறார்.
இந்த அற்புதமான கட்டமைப்புகள் உண்மையில் பண்டைய எகிப்தியர்களால் கட்டப்பட்டவை என்பதற்கு 1990களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகள் உறுதியான சான்றாக விளங்குவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மஸ்க்கின் ட்வீட்டும், எகிப்து அமைச்சரின் பதிலடியும்
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, “கண்டிப்பாக, பிரமிடுகளை கட்டியது வேற்றுகிரகவாசிகள்தான்” என்று எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மஸ்க்கின் பதிவுக்கு ட்விட்டரிலேயே பதிலளித்த எகிப்தின் முதலீடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறையின் அமைச்சர் ரணியா அல்-மஷாட், “பாராட்டு மிக்க உங்கள் பணிகளை நான் பின்தொடர்ந்து வருகிறேன்.
பிரமிடுகள் எவ்வாறு கட்டப்பட்டன என்பது பற்றிய விளக்கங்களை ஆராயவும், பிரமிடுகளை கட்டியவர்களின் கல்லறைகளைப் பார்வையிடவும் நான் உங்களுக்கும் ஸ்பேஸ் எக்ஸூக்கும் அழைப்பு விடுகிறேன். மஸ்க், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் காணொளி ஒன்றின் மூலமாக அரபு மொழியில் பதிலளித்துள்ள எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ், மஸ்க்கின் வாதம் ஒரு “முழுமையான மாயை” என்று தெரிவித்துள்ளார்.
“பிரமிடு கட்டியவர்களின் கல்லறைகளை நான் கண்டேன். பிரமிடுகளை கட்டியவர்கள் எகிப்தியர்கள்.
அவர்கள் அடிமைகள் அல்ல என்று அவை அனைவருக்கும் செல்கின்றது“ என்று அவர் கூறியதாக எகிப்துடுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பிரமிடு கட்டுமானத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து பிபிசி செய்தித்தளத்தில் வெளியான கட்டுரையொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், “பிபிசியின் இந்த கட்டுரை அது எவ்வாறு கட்டப்பட்டது என்பதற்கான அர்த்தமுள்ள சுருக்கத்தை வழங்குகிறது” என்று கூறினார்.
100க்கும் மேற்பட்ட பிரமிடுகள் இருந்தாலும், அவற்றில் சுமார் 450 அடி உயரம் கொண்ட கிரேட் பிரமிட் ஆஃப் கிசா என்பதே மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குகிறது.
பிரமிடுகளில் பெரும்பாலானவை எகிப்து அரச குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்லறைகளாகவே கட்டப்பட்டன.