லெபனான் மீட்பு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பெய்ரூட் துறைமுகம் அருகே நடந்த வெடிப்பில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடிப்பில் குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளனர்; 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.
அந்த வெடிப்பின் பெய்ரூட் நகரமே குலுங்கியது. காளான் கொடை வடிவத்தில் புகை மேலே எழுந்தது.
கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.
இன்றிலிருந்து (புதன்கிழமை) நாடு முழுவதும் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என லெபனான் அதிபர் ஆன் தெரிவித்துள்ளார்.
“நேற்று இரவு பெய்ரூட் எதிர்கொண்ட பேரச்சத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது பெய்ரூட்டை பேரழிவு தாக்கிய நகரமாக மாற்றிவிட்டது,” என்று அவசர அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் ஆன் தெரிவித்தார்.
புகை, இடிபாடுகள் அனைத்தையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வெடிப்பு உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு துறைமுக பகுதியில் நடந்தது.
தான் நெருப்பை நேரில் பார்த்ததாகவும், ஆனால் வெடிப்பு சம்பவத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் கண்ட ஹதி நஸ்ரல்லா கூறுகிறார்.
அவர், “நான் கேட்கும் திறனை சில நிமிடங்களுக்கு இழந்துவிட்டேன். ஏதோ தவறாக நடக்கிறது என்று புரிந்தது. என் அருகே இருந்த காரின் கண்ணாடிகள், கடைகள், வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின,” என்று தெரிவித்தார்.
பிபிசி நிருபரின் அனுபவம்
பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தின் போது பிபிசி அரபு சேவையின் செய்தியாளர் மரியம் ஒரு காணொளி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அந்த காணொளியில் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வு பதிவாகி உள்ளது.
பிபிசியில் பணியாற்றும் லினா சின்ஜாபும் இந்த வெடிப்பினால் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்து இருக்கிறார். துறைமுக பகுதி அருகே ஐந்து நிமிட பயண தொலைவில் அவர் வீடு இருக்கிறது.
அவர், “எங்கள் கட்டடம் கீழே சரிந்து விழுவது போல அதிர்ந்தது. எல்லா ஜன்னல்களும் திறந்தன,” என்கிறார்.
நிலநடுக்கம் என்று கருதியதாக சைப்ரஸ் தீவு மக்கள் கூறுகிறார்கள்.
இதனை மாபெரும் பேரழிவு என வர்ணிக்கிறார் லெபனான் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜார்ஜ். “எங்கும் பாதிக்கப்பட்டவர்களை, காயமடைந்தவர்களைக் காண முடிகிறது,” என்கிறார் அவர்.
பிணவறை அமைக்கும் பணியில் லெபனான் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து ஈட்டுப்பட்டிருப்பதாகச் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது. காணாமல் போன 100 பேரை தேடி வருவதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
லெபனானில் காயமடைந்தவர்களைக் குணப்படுத்த போதுமான படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் இல்லை என பொதுச் சுகாதார அமைச்சர் ஹமத் ஹசன் கூறினார்.
ஏராளமான குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் அதே நேரம் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அச்சமாக உள்ளது என அவர் கூறினார்.
2013ஆம் ஆண்டு ஒரு கப்பலிலிருந்து அமோனியம் நைட்ரேட் தரையிறக்கப்பட்டதாகவும், கடந்த ஏழு ஆண்டுகளாக அந்த கிடங்கில் இருப்பதாகவும் கூறும் விசாரணை அதிகாரிகள், எப்படி வெடித்தது என்பதை விசாரித்து வருவதாகக் கூறுகின்றனர்.
பிபிசியிடம் பேசிய பிரிட்டனின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி பிலிப் இன்கிராம், குறிப்பிடத்தக்க சில சூழ்நிலைகளில்தான் அமோனியம் நைட்ரேட் வெடிப் பொருளாக மாறும் என தெரிவித்தார்.
எரிபொருளுக்கான எண்ணெய் ஆகியவையுடன் கலக்கும் போது இது வெடிக்கலாம் என தெரிவித்தார்.
இதற்குக் காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என லெபனான் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி கூறினார்.
ஏற்கெனவே லெபனான் கொரோனாவுடன் போராடி வருகிறது.
லெபனான் மருத்துவமனைகள் கோவிட் 19 நோயாளிகளால் நிரம்பி உள்ளன.
இதற்கு மத்தியில் அங்குப் பொருளாதார பிரச்சனைகளும் நிலவி வருகின்றன.
தங்களது உணவு தேவையை பெரும்பாலும் லெபனான் இறக்குமதியே செய்கிறது. அவை துறைமுக பகுதியில் உள்ள கிடங்குகளில்தான் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இப்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் அவையும் அழிந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த வெடிப்பினால் பாதிக்கப்படாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமூக ஊடகங்களின் மூலமாக உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.