லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாபெரும் வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துறைமுக நிர்வாக அதிகாரிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பில் சிக்கி இதுவரை குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், லெபனானில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் இருந்த கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.
விவசாயத்தில் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று கூடிய லெபனான் அமைச்சரவையின் அவசர கூட்டத்தில் பேசிய அதிபர் மைக்கேல் ஆன், “நேற்று இரவு பெய்ரூட் எதிர்கொண்ட கோர சம்பவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இது பெய்ரூட்டை பேரழிவு தாக்கிய நகரமாக மாற்றிவிட்டது” என்று கூறினார்.
புகை, இடிபாடுகள் என அடைந்து இடர்பாடுகளையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக சம்பவ இடத்திற்கும், மருத்துவமனைக்கும் உதவ சென்ற மக்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணு குண்டு சக்தியில் பத்தில் ஒரு பங்கு இது இருந்திருக்கலாம் என்று பிரிட்டனின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும், மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத வெடிப்புகளில் இதுவும் ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.