Site icon ilakkiyainfo

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளும், உணவுமுறையும்

ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச்சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

மனித உடலில் உள்ள ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் ஓடுகிறது. அப்படி ரத்தம் இதயத்துக்கு வரும்போது குறிப்பிட்ட வேகத்தில் வரும். இதயத்தில் இருந்து வெளியே செல்லும்போது வேறொரு வேகத்தில் செல்லும். இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம். பொதுவாக ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. என்ற பாதரச அளவில் இருந்தால், அது இயல்பானது, பிரச்சினையில்லை.

120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகிற அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம். அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியே அனுப்பிய பிறகு, உடலில் இருந்து வருகிற ரத்தத்தைப் பெற்றுக்கொள்ளும். அப்போது ஏற்படுகிற ரத்த அழுத்தம் முன்னதைவிட குறையும். ரத்தம் அழுத்தம் என்பது எல்லோருக்கும் 120/80 மி.மீ. பாதரச அளவில் இருக்காது. எனவே, 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ.வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘இயல்பானது’ என்று உலகச் சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதில் சிறுநீரகங்கள், அட்ரினலின் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச்சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீ பைன்டு ஆயில் ஆகியவற்றைக் குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் வேண்டாம். ஆவியில் வேக வைத்த உணவு வகை மிகவும் ஏற்றவை. எப்போதாவது கோழிக்கறி அல்லது மீன் குழம்பைச் சாப்பிடலாம். காபி, தேநீருக்குப் பதிலாகப் பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீயைக் குடிக்கலாம். இவற்றில் நிறைந்துள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். அத்துடன் கொழுப்பைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், எடையையும் குறைக்கும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகைகள், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம்.

பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்பதால் பால், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர் ஆகியவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்குப் பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக் குழாயை விரிவடையச் செய்கின்றன. தமனிகளில் படியும் கால்சியம் தாதுக்களையும் தடுக்கின்றன.

தலை சுற்றும்போது மட்டும், உயர் ரத்த அழுத்தம் இருக்குமோ என்று பலரும் சந்தேகப்படுவார்கள். அது மட்டுமல்ல தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான்.

குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், 30 வயதைக் கடந்தவர்களும் தொடர்ந்து உயர் ரத்த அழுத்த அளவை கண்காணித்துவர வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் மாத்திரை இல்லாமல் உணவுப் பழக்கம் மூலம் சமாளிக்க முடியும். அதேநேரம், இதயம், மூளை, சிறுநீரகம், கண் எனப் பிற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை உயர் ரத்த அழுத்தத்துக்கு இருப்பதால், முறையான சிகிச்சை அவசியம்.

Exit mobile version