மட்டக்களப்பில்  நகைக்கடை  ஒன்றில் திருட்டில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 8 கோடி ரூபா பெறுமதியான நகைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 

மட்டக்களப்பு நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில்  கடந்த 2ஆம் திகதி இரவு இந்தத் திருடடுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 10 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் சுமார் 5 இலட்சம் ரூபா பணமும் திருடப்பட்டிருந்தன.

இது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து  மட்டக்களப்பு பொலிஸாரும் மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்திருந்தனர்.

 

கிழக்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலாந்த ஜயவர்த்தனவின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸின் வழி காட்டலில்  மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதனடிப்படையில் குறித்த நகை கடையில்  பணி புரிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் களுதாவளையில் வைத்து  குறித்த நகைக் கடையில் முன்னர் கடமையாற்றிய ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டன.

 

இதனைத் தொடந்து இது தொடர்பில் கண்டியை சேர்ந்த ஒருவரும் கண்டியில் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து ஒரு தொகை தங்கமும் கைப்பற்றப்பட்டது.  இதன்படி 8 கோடி ரூபா பெறுமதியான தங்க  நகைகளும்  ஒரு தொகை பணமும் இதுவரை  கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, குறித்த திருட்டுத்  தொடர்பில் சந்தேகத்தின்  பேரில் நேற்றுவரை  நால்வர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களிடம்  விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முற்கொண்டு வருகின்றனர்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version