இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை இன்று (19) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போதே 19ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்திற்கு பதிலாக 20ஆவது திருத்த சட்டமூல வரைவை தயாரிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

19ஆவது திருத்தம் என்றால் என்ன?

இலங்கை அரசியலமைப்பில் இறுதியாக 2015ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதுவே 19ஆவது திருத்தம் என அழைக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்க முடியும் என்ற விடயத்தை 18ஆவது திருத்தத்தின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றியமைத்திருந்தார்.

 

இந்த 18ஆவது திருத்தத்தை நிச்சயம் ரத்து செய்வதாக தெரிவித்தே, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார்.

அதன்படி, 18ஆவது திருத்தத்தின் மூலம் அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதியின் மேலதிக அதிகாரங்கள், 19ஆவது திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டன.

அதுமாத்திரமன்றி, இலங்கையில் சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கும் வகையில் 17ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்தும் சரத்துக்கள் 19ஆவது திருத்தத்திலேயே உள்வாங்கப்பட்டன.

அதன்படி, தேர்தல் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய போலீஸ் ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, எல்லை நிர்ணண ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, அரச கரும மொழிகள் ஆணைக்குழு என ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

இந்த நிலையில், 19ஆவது திருத்தத்தினால் அரசாங்கத்தை சரியான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதுள்ளதாக தெரிவித்தே, அரசாங்கம் புதிய திருத்தமொன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஏன் 19 ரத்து செய்யப்பட வேண்டும்?

இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சிறந்த விடயங்கள் உள்வாங்கப்பட்ட போதிலும், மாற்றப்பட வேண்டிய விடயங்களும் காணப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

19ஆவது ரத்து செய்யப்படுகின்றது என்றால், 18ஆவது அமலாக போகின்றது என்ற விடயமொன்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும், 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதன் ஊடாக அது இல்லாது போகும் என அவர் கூறினார்.

19ஆவது திருத்தச் சட்டத்தின் 14ஆவது சரத்தில் கூறப்பட்டுள்ள தகவலறியும் உரிமையானது, அந்த திருத்தத்திலுள்ள மிகச் சிறந்த விடயம் என அவர் தெரிவித்ததுடன், அதனை 20ஆவது திருத்தத்தில் மாற்றியமைக்கக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார்.

எனினும், தகாத சில சரத்துக்களும் 19ஆவது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நான்கரை வருடங்களுக்கு ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது என கூறப்பட்டுள்ள சரத்தானது, நாட்டிற்கு பாதகமானது என அவர் தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் கால எல்லை இரண்டரை முதல் 3 வருடங்களுக்கு வரையறை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

அதேபோன்று அரசியலமைப்பு சபையொன்று அரசியலமைப்பில் காணப்படுகின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்தும் விதம் தவறானது என அவர் கூறுகின்றார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரும், புத்திஜீவிகள் 3 பேரும் இந்த அரசியலமைப்பு சபையில் அங்கம் வகிக்கும் வண்ணம் சரத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அது மாற்றியமைக்கப்பட்டு, பெரும்பான்மை புத்திஜீவிகளும், ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு சபைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் அதேவேளை, ஜனாதிபதியொருவர் 2 தடவைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாத வண்ணமே புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

அத்துடன், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளை பொறுப்பேற்கும் வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா குறிப்பிடுகின்றார்.

அமைச்சரவை கலைக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதியொருவர் நாட்டை கையாளும் விதம் அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, 1978ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் இதுவரை 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 20ஆவது திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது.

13ஆவது திருத்தம் மாற்றப்படுமா?

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் இந்தியாவின் தலையீட்டினால் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவையிலுள்ள ஒரேயொரு தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

13ஆவது திருத்தத்தை ரத்து செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற பின்னணியிலேயே அவர் ஊடக அறிக்கையொன்றின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஆட்சியாளர்களினால் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தத்தை மாத்திரமே ரத்து செய்து, 20ஆவது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

13ஆவது திருத்தம் தொடர்பில் சிலர் போலி கருத்துக்களை வெளியிட்டு, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version