ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்குமாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தும் ஏற்பாடுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக பதவிவகிப்பதை கட்டுப்படுத்தும் பிரிவுகள் நீக்கப்படும் என்ற வதந்திகள் வெளியாகியுள்ள போதிலும் அந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து பேணுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதியமாற்றங்கள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவையில் ஆராய்வார் அதன் பின்னர் அந்த மாற்றங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு செப்டம்பரில் நிறைவேற்றப்படும் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னைய அரசாங்கத்தின் கீழ் 19வது திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை பலவீனமானவையாகவும் அரசியல் தலையீடுகளுக்கு உட்படுபவையாகவும் காணப்பட்டன என தெரிவித்துள்ள அரசவட்டாரங்கள் ஜனாதிபதி சுயாதீன ஆணைக்குழுக்களை மேலும் பலப்படுத்த விரும்புகின்றார் என குறிப்பிட்டுள்ளன.
சுயாதீன ஆணைக்குழுக்கள் மேலும் சுதந்திரமாக செயற்படுவதை ஜனாதிபதி விரும்புகின்றார் எனவும் அவை தெரிவித்துள்ளன.