இலங்கையின் நிழலுலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பாதுகாப்பு பிரிவினர் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

கைது செய்யப்படும் சந்தேகநபர்களிடம் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாக அவர்களிடமிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றி வருகின்றனர்.

குறிப்பாக போதைப்பொருள் வர்த்தகத்துடன், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவைச் சேர்ந்த போலீஸ் உத்தியோகத்தர்களும் தொடர்புப்பட்டுள்ளமை அண்மையில் தெரியவந்திருந்தது.

இவ்வாறான பின்னணியில், தற்போது இலங்கையின் பிரபல ஊடக நிறுவனமொன்றின் ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதங்களை கொண்டு செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் பிரதான பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

ஊடகவியலாளர் தொடர்பில் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் படி, கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம – பிடிபன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளருக்கான அங்கீகாரத்தை பயன்படுத்தி, குறித்த ஊடகவியலாளர் ஆயுதங்களை கடத்த உதவி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

ஊடகவியலாளர் தமது ஊடகவியலாளர் அடையாள அட்டை மற்றும் ஊடக நிறுவனத்தின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்தியே இந்த ஆயுதங்களை கடத்த உதவி புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சிங்கள பத்திரிகையொன்றில் கடமையாற்றும் பிரபல ஊடகவியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆயுத கடத்தல் விவகாரத்தில் வேறு ஊடகவியலாளர்கள் தொடர்புப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் கூறுகின்றனர்.

எனினும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக வேறு ஊடகவியலாளர்கள் இந்த ஆயுத கடத்தல் விவகாரத்துடன் தொடர்புப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம – பிடிபன பகுதியிலுள்ள வர்த்தக நிலைய கட்டடமொன்றிலிருந்து கடந்த ஜுன் மாதம் 20ஆம் தேதி ரி-56 ரக துப்பாக்கிகள் 12 மீட்கப்பட்டிருந்தன.

பொட்ட கபில என்ற நபரினால் வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் இந்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது காதலியின் வீட்டிலிருந்து மேலும் பல ஆயுதங்கள் உள்ளிட்ட சட்ட விரோத பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

தற்போது சிறையிலுள்ள நிழலுலக தலைவர்களில் ஒருவரான கொஸ்கொட தாரகவின் ஆலோசனைகளுக்கு அமையவே இந்த ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version