மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த யுவதி யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 21 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்டவர்கள்களில் உயிரிழந்த யுவதியின் இரத்த உறவினர் ஒருவர் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நெடுந்தீவைச் சேர்ந்த குறித்த இளம் பெண்ணை மன்னாருக்கு அழைத்துச் சென்று கொலை செய்து உப்பளத்தில் வீசியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சகோதரி உள்ளிட்ட இரண்டு பெண்கள் கொலையின் பிரதான சந்தேக நபரனான இளம் பெண்ணின் மாமனார் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம்  குறித்து மேலும் தெரிய வருகையில்,

மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளம் ஒன்றின்  உப்பளம் பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட சடலம் பெண் என அடையாளம் காணப்பட்டது. குறித்த சடலம் தொடர்பில் மன்னார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

அன்றைய தினம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மன்னார் பொலிசார், சடலத்தை மீட்டு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார். இதனையடுத்து சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது.

தடயவியல் பொலிஸாரின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தடயப்பொருள்களும் மீட்கப்பட்டன.

சம்பவம் குறித்து மன்னார் தலைமையகப் பொலிஸாரும்,  விசேட புலனாய்வு பிரிவினரும்  இணைந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டது.

சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அதிகாரியின் அறிக்கையின் படி பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டு, அவரது கால்கள், கைகள் பிடித்து வைத்திருக்கப்பட்ட நிலையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கொண்டு அவர் தொடர்பில் மடு (மடு ஆலயத் திருவிழா இடம்பெற்ற காலப்பகுதி) மற்றும் மன்னாரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் போது கொலை செய்யப்பட்ட இளம் பெண், இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவரும் சென்று மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உட்கொண்ட காட்சி பதிவாகியிருந்தது.

அந்தக் காட்சியைப் பெற்ற பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர்.

ஆரம்பத்தில் அந்தப் பெண்கள் நாவற்குழி என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர்கள் இல்லை. தொடர்ச்சியாக முன்னெடுத்த விசாரணைகளில் கொலை செய்யப்பட்ட பெண் நெடுந்தீவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சகோதரி (வயது -30), அவரது பெரியதாயின் மகனின் மனைவி ஆகிய இருவரும் நெடுந்தீவில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள்   மன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணைகளின் பின்னர் இருவரும் மன்னார் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

அத்துடன், தலை மறைவாகியுள்ள 50 வயதுடைய பிரதான சந்தேக நபரான கொலை செய்யப்பட்ட பெண்ணின் மாமனார் தேடப்பட்டு வருகின்றார்.

‘சகோதரியின் கணவருக்கும் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அவரது சகோதரி சந்தேகம் கொண்டுள்ளார்.

இந்தச் சந்தேகத்தால் சகோதரிகள் இடையே முரண்பாடு நீடித்துள்ளது. இளம் பெண்ணின் தந்தை காலமாகிய நிலையில் தாயார் வெளிநாட்டில் உள்ளார்.  அவரது தாயின் சகோதரன் செட்டிக்குளத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு முகவர் நிலையத்துடன் தொடர்புடையவர்.

அதனால் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறியுள்ளார்.

அதனால் கொழும்பில் சில ஆவணங்கள் கையளிக்க வேண்டும் என்று தெரிவித்து சகோதரிகள் இருவரையும் அவர்களது பெரிய தாயின் மகனின் மனைவியையும் அழைத்துக் கொண்டு மன்னார் பயணித்துள்ளார்.

அங்கு நகரில் நடமாடிவிட்டு உப்பளத்தில் எவரும் இல்லை என அறிந்து இளம் பெண்ணை மூவரும் அங்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மாமன் கழுத்தை நெரிக்க மற்றைய இரு பெண்களும் கால்களையும் கைகளையும் பிடித்து வைத்திருந்துள்ளனர். உயிர் பிரிந்ததும் அங்கிருந்து தப்பித்துள்ளனர்’ என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version