சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதன்போது, காயமடைந்த குறித்த சந்தேக நபர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (23) முற்பகல் சிலாபம் மருத்துவமனையின் 18வது நோயாளர் அறையின் கழிப்பறையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தற்கொலைக்கு முயன்ற நபர் மாதம்பே-கல்மூருவ பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை 22 வயதுடைய யுவதி ஒருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளதோடு, பின்னர் விசம் அருந்தி தற்கொலை செய்துகொள்வதற்கு முயற்சித்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.