பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு செய்யப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் “நெகட்டிவ்” என சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்களை அவரது மகன் எஸ்.பி. சரண் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் இன்று நண்பகலில் வெளியான தகவலைத் தொடர்ந்து, பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த விவகாரத்தில் எஸ்.பி. சரண், மக்கள்தொடர்பு அதிகாரி நிகில் முருகன் பெயரில் பகிரப்பட்ட குறுஞ்செய்தியில் “எனது தந்தைக்காக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை நலமுடன் இருக்கிறார். அவரது கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக வந்துள்ளது. மேற்கொண்டு தகவல்களை உங்களுக்கு தொடர்ந்து பகிர்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் அடிப்படையில் பல ஊடகங்கள் செய்திகலை ஒளிபரப்பின. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்து வந்தனர்.

திடீர் காணொளியில் விளக்கம்

இந்த நிலையில், எஸ்.பி. சரண் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

“எனது தந்தையின் உடல் நிலை தொடர்பாக மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்திய பிறகே வழக்கமாக நான் தகவல்களை பகிர்வேன். ஆனால், துரதிருஷ்டவசமாக இன்று காலை ஒரு தகவலை பகிரும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எனது தந்தையின் உடல்நிலை தொடர்பான தகவல்கள் அனைத்தும் முதலாவதாக எனக்கே வந்து சேரும். பிறகு நான்தான் அதை ஊடகங்களிடம் பகிர்வேன். இன்று துரதிருஷ்டவசமாக எனது தந்தையின் கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்று வந்துள்ளதாக ஒரு வதந்தி உலவுகிறது. அவருக்கு கொரோனா பாசிட்டிவா நெகட்டிவா என்பதை விட, அவரது உடல்நிலை, அப்படியேதான் உள்ளது. மருத்துவ ரீதியாக அவர் வென்டிலேட்டர் உதவியுடனும், எக்மோ கருவி உதவியுடனும் அவரது உடல்நிலை அதிர்ஷ்டவசமாக நிலையாக இருக்கிறது. அந்த நிலைப்புத்தன்மை, அவரது நுரையீரல் தொற்று முழுமையாக குணமடைய உதவும் என நம்புகிறோம். எனவே, உலாவரும் வதந்திகளை நம்பாமல் தவிருங்கள். இன்று மாலை மருத்துவர்களுடனும், மருத்துவ குழுவினருடனும் பேசிய பிறகு அப்போதைய சமீபத்திய தகவல் அடங்கிய காணொளியை பகிர்கிறேன்” என்று எஸ்.பி. சரண் கூறியுள்ளார்.

18 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு கடந்த 18 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

தினமும் மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் எஸ்.பி. சரணும் அவ்வபோது காணொளி வெளியிட்டு வருகிறார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய திரைப்பிரபலங்களும் அவரது ரசிகர்களும் கூட்டு பிரார்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், எஸ்.பி.பியின் கொரோனா முடிவுகள் தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியானதால் அவரது ரசிகர்கள் மிகவும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version