ஓட்டப்பந்தயத்தில் எப்படி யுசேன் போல்ட்டோ, அது போன்று கணிதத்தில் நீலகந்த பானு பிரகாஷ் எனலாம்.

மனதில் வேகமாக கணக்கு போடுபவர்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றுள்ளார் 20 வயதான ஹைதராபாதை சேர்ந்த பானு பிரகாஷ்.

“கணிதம் மூளைக்கான பெரும் விளையாட்டு” என்று குறிப்பிடும் அவர், கணிதம் மீதான பயத்தை போக்குவதே தனது நோக்கம் என கூறுகிறார்.

எந்நேரமும் எண்கள் குறித்து மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கும் பானு பிரகாஷ்தான் தற்போது உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்.

“மனதில் போடும் கணக்கை, ஓட்டப்பந்தையத்துடன் ஒப்பிடும் அவர், வேகமாக ஓடுபவர்களை யாரும் கேள்வி கேட்பது கிடையாது, ஆனால் மனதில் கணக்கு போடுபவர்களை (mental maths) மட்டும் கேள்வி கேட்கிறார்கள்” என்கிறார் நீலகந்த் பானு.

இது தொடர்பாக பிபிசி ரேடியோ 1 நியூஸ்பீட்டுக்கு பேட்டியளித்த பானு பிரகாஷ், “யுசேன் போல்ட் மாதிரியான ஒருவர், 100 மீட்டர் தூரத்தை 9.8 விநாடிகளில் ஓடிக் கடக்கும்போது நாம் அவரை கொண்டாடுகிறோம். கார்கள் மற்றும் விமானங்கள் இருக்கும் இந்த உலகத்தில் ஏன் இப்படி வேகமாக ஓட வேண்டும் என்று யாரும் கேள்வி எழுப்ப மாட்டோம். ஏனெனில் இது போன்று உங்களாலும் சாதிக்க முடியும் என்று ஊக்கப்படுத்துவதுதான் முக்கியம். அதே போன்றுதான் கணிதமும் கணக்கும்” என்று தெரிவித்தார்.

‘உங்கள் மூளைக்கான வேலை’

பிறந்ததில் இருந்தே பானு புத்திசாலியாக இருந்திருப்பார் என நீங்கள் நினைத்தால் அது தவறு.

5 வயதாக இருக்கும்போது அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகுதான் அவரது இந்த பெரும் கணிதப்பயணம் தொடங்கியது.

“எனக்கு அறிவாற்றல் குறைபாடு இருப்பதாக என் பெற்றோரிடம் பலரும் கூறினார்கள். அதனால் என் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுக்க வேண்டும் என்று மனதில் கணக்கு போட ஆரம்பித்தேன்.”

இந்தியாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது என்று கூறுகிறார் பானு பிரகாஷ்.

எண்கள் குறித்து அதிக ஆர்வம் கொண்ட பானு பிரகாஷ், கணிதத்தில் தனது பட்டப்படிப்பை முடிக்க உள்ளார்.

‘கணிதம் என்பது ஒரு பெரும் விளையாட்டு’

கணிதம் என்பது மேஜையில் அமர்ந்து படித்து கற்றுக் கொள்வது கிடையாது. இதனை “ஒரு மூளைக்கான பெரும் விளையாட்டு” என்று குறிப்பிடுகிறார் பானு பிரகாஷ்.

“வேகமான கணித மேதை ஆக வேண்டும் என்ற நோக்கில் நான் என்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக ஒரு வேகமான சிந்தனையாளராக வேண்டும் என்பதே என் நோக்கம்”

சிறு வயதிலேயே பள்ளியில் படிக்கும் நேரம் தவிர்த்து, ஆறிலிருந்து ஏழு மணி நேரத்திற்கு பயிற்சி எடுத்தார் பானு பிரகாஷ்.

ஆனால் பல சாம்பியன்ஷிப் பட்டங்களை பெறத்தொடங்கியதில் இருந்து அவர் தினமும் பயிற்சி எடுப்பதை நிறுத்திவிட்டார்.

அதற்கு பதிலாக “எப்போதும் எண்கள் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும் படியான ஒரு பயிற்சியை செய்யத் தொடங்கினார்” பானு பிரகாஷ்.

“இசையை அதிக சத்தத்துடன் வைக்கும்போது, பிறரிடம் பேசும்போது, கிரிக்கெட் விளையாடும்போது நான் எண்களைப் பற்றி நினைக்கும்படி பயிற்சி எடுப்பேன். ஏனெனில் அப்போதுதான் உங்கள் மூளை ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய பயிற்சியாகும்.”

இந்த நேர்காணலுக்கு நடுவே 48ஆம் வாய்பாடை கூறியவாறே இவற்றை தெரிவித்தார் பானு பிரகாஷ்.

“நான் பார்க்கும் கார்களில் உள்ள வாகன எண்களை எல்லாம் கூட்டிக் கொண்டே செல்வேன். நான் யாருடனாவது பேசினால், அவர்கள் எத்தனை முறை கண் இமைக்கிறார்கள் என்று எண்ணுவேன். இதனை கேட்க ஒரு மாதிரி இருக்கும். ஆனால், இது என் மூளையை செயல்பாட்டில் வைக்கும்”

‘மக்களை ஊக்கப்படுத்துவதே நோக்கம்’

தொடர்ந்து பட்டங்களை வெல்ல வேண்டும் என்பது மட்டுமே பானு பிரகாஷின் குறிக்கோள் இல்லை.


பலரும் எண்களைக் கண்டால் அஞ்சுகிறார்கள். கணிதம் மீதான பயத்தை போக்குவதே தம் முக்கிய குறிக்கோள் என்கிறார் அவர்.

பல சாதனைகளை படைத்த பானு பிரகாஷிற்கு அவரது குடும்பத்திடம் இருந்து பெரும் ஆதரவு உள்ளது.

“முதல் சர்வதேச சேம்பியன்ஷிப் பட்டத்தை நான் வென்ற பிறகு, உலகில் இதுவரை வாழ்ந்த எவரையும் விட மிக வேகமாக கணக்கு போடும் நபராக நான் முயற்சிக்க வேண்டும் என்று என் மாமா கூறினார். ஆனால், நான் உலகின் அதிவகே மனித கால்குலேட்டராவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்றார் பானு பிரகாஷ்.

Share.
Leave A Reply

Exit mobile version