திருச்சி அருகே புதுப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் பகுதியை சேர்ந்தவர் திரவிய நாதன். இவரது மகள் கிறிஸ்டியன் ஹெலன் ராணி (வயது 26). இவருக்கும் திருச்சி நெம்பர் 1 டோல்கேட் அருகே வாழவந்திபுரத்தை சேர்ந்த ஜான் ரவி மகன் அருள்ராஜ் (28) என்பவருக்கும் கடந்த 10.7.2020 அன்று திருமணம் நடைபெற்றது. அருள்ராஜ் கேரளாவில் பிளம்பராக வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரிலேயே மனைவியுடன் இருந்து வந்தார்.
நேற்றிரவு இருவரும் வாழவந்திபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு மாடியில் படுத்து தூங்கினர். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அந்த வீடு அமைந்துள்ளது.
நள்ளிரவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக கிறிஸ்டியன் ஹெலன் ராணி தனியாக ஆற்றின் கரையோர பகுதிக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. நீண்ட நேரமாகியும் ஹெலன் ராணி வராததால் அதிர்ச்சியடைந்த அருள்ராஜ், தனது உறவினர்களிடம் கூறியதுடன், அவர்களுடன் சேர்ந்து ஹெலன்ராணியை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆற்றின் கரையோர பகுதிக்கு சென்று பார்வையிட்ட போது, இருள் சூழ்ந்து இருந்ததால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது.
இந்தநிலையில் இன்று அதிகாலை கொள்ளிடம் ஆற்றில் சிறிதளவு தண்ணீரில் ஹெலன்ராணி பிணமாக மிதந்தார். ஆடைகள் களைந்த நிலையில் நிர்வாணமாக கிடந்தார். இதைப்பார்த்த அருள்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இது குறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜெயச்சந்திரன் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஹெலன் ராணி எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அணிந்திருந்த தங்க செயின், கம்மல் உள்பட 5 பவுன் நகைகள் திருட்டு போயுள்ளது. இதனால் நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற ஹெலன் ராணியை மர்மநபர்கள் கற்பழித்து கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாயானது அங்கிருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமணமான 50 நாட்களில் புதுப்பெண் பாலியல் வன்கொடுமை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.