ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய பின்னர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியேறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (திங்கட்கிழமை) முன்னிலையாகவுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குறித்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு கடந்த 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

குறித்த தினத்தில் தனக்கு முன்னிலையாக முடியாது என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

மேலும் ஒகஸ்ட் 31ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார். அதற்கமைய அவர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

இதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த 26ஆம் திகதி சுமார் 9 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து கடந்த நல்லாட்சி அரசாங்தின்போது இந்த தாக்குதல் குறித்து ஆராய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. குறித்த ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், புலனாய்வு அதிகாரிகள் என பலர் சாட்சியம் வழங்கினர்.

விசாரணையின்போது, இந்த தாக்குதல் குறித்து ஏற்கனவே புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பாக ரணில்- மைத்திரி அரசாங்கம் உரிய நடவடிக்கையினை முன்னெடுக்கவில்லையென பலர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version