காணாமற்போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கருத்து தெரிவித்திருப்பதாக யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் காணாமற் போனவர்களில் அரைவாசிப்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றார்கள் என அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக அவரிடம் முறையான விளக்கம் கோரப்பட வேண்டும் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது பற்றி கவலைகொள்ளாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இடைக்கால நீதிப்பொறிமுறை ஒன்று இருப்பதாக நம்பும் சர்வதேச சமூகம் நீதியைக்கோரும் குடும்பங்கள் தொடர்பாக ஒரு தார்மீகப் பொறுப்பு உள்ளது என்றும் எனவே கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் தொடர்ச்சியான ஆதரவினை வெளிக்காட்டுவதற்கு முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

மேலும், இலங்கையில் காணாமற்போனோர் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்கான தேடலில் ஈடுபட்டமைக்காக இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 15 பேருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்கிறது.

போர் முடிவடைந்த பின்னர் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தமது உடன்பிறப்புக்கள் காணாமற்போனமை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரியவர்கள், அதற்காக மிகப் பயங்கரமான விலையைக் கொடுத்திருக்கிறார்கள் என யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார்.

தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மாத்திரம் அறிய விரும்பியவர்களை தொடர்ந்தும் வெள்ளை வேனை அனுப்பித் துன்புறுத்த முடியாது என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share.
Leave A Reply

Exit mobile version