தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார் என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு தான் தயார் என மஹிந்த தன்னிடம் கூறியதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது கப்பல்கள் மூலம் பொதுமக்களை வெளியேற்ற நோர்வே முன்வந்தது என குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், அனைத்து பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பதிவு செய்யவேண்டும் என தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பெயர்களை கொண்டவர்களை கண்டுபிடித்து கப்பல் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை தாம் முன்வைத்தபோதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்துவிட்டார் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version