இலங்கையில் தற்போது இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 வது திருத்தத்தினை நீக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. அத்திருத்தம் அரசியலமைப்பில் இணைக்கப்பட் வேளையில் விடுதலைப்புலிகள் அந்த நிர்வாகக் கட்டுமானத்தினை தமது கட்டுப்பாட்டில் பெற பல முயற்சிகள் மேற்கொண்டனர். இருந்த போதிலும் அது சாத்தியப்படாத நிலையில் அதற்கான தேர்தலைத் தடுக்கும் வகையில் செயற்பட்டனர்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அத் தேர்தலை நடத்தவும், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் இந்திய சமாதான ராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைக் களைவதாக ஏற்றுக்கொண்ட இந்திய ராணுவம் விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய முயற்சிகள் எடுத்தபோது இரு தரப்பிற்குமிடையே போர் மூண்டது.

இப் போரின் விளைவாக பல உயிர்கள் பறிபோனது. இலங்கை ராணுவத்தினரும் அதிக விலை கொடுத்தனர். போரை வெற்றி கொள்ள முடியாது என எண்ணிய இலங்கை அரசு சமாதான முயற்சிகளில் இறங்கி நோர்வே நாட்டின் உதவியை நாடியது. இச் சமாதான முயற்சிகளில் இறங்கிய நோர்வே இலங்கை அரசிற்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. இப் பேச்சுவார்த்தைகள் இலங்கையில் அமைந்த மூன்று அரசுகளால் நடத்தப்பட்டன. இந்த மூன்று அரசுகளின் காலத்திலும் நோர்வே நாட்டின் அனுசரணையாளராக எரிக் சோல்ஹெய்ம் செயற்பட்டார். இவராலும் மற்றும் பலராலும் அமைதியை ஏற்படுத்தஎடுத்த முயற்சிகள் வியர்த்தமாகின.

இப் பின்னணியில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுகளுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்தiதைகளின் சில அம்சங்களை ‘மின் அஞ்சல்’வழிமூல செவ்வியில் கேள்வி பதிலாக அவர் அளித்த விபரங்கள் பின்வருமாறு

வினா : இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் நீங்கள் மிக முக்கிய பங்கை வகித்திர்கள். தற்போது உங்களுக்குஎதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கவலை கொள்கிறீர்களா? குறிப்பாக போரின் இறுதிக்காலத்தில் சமாதானத் தூதுவராக உங்கள் பங்களிப்பு குறித்தவை?

பதில் : தற்கால போர் வரலாற்றில் மிகவும் ரத்தம் தோய்ந்த,பல்லாயிரம் மக்கள் பலிகொள்ளப்பட்ட போர்களில்இது ஒன்றாகும். அங்கு பலரின் அன்புக்குரியவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் தெற்கிலுள்ள கிராமங்களின் ராணுவமாக இருக்கலாம் அல்லது வடக்குத் தமிழர்களின் மக்களாக இருக்கலாம். ஆனால் மொத்தத்தில் அவர்கள் மக்களே. எமது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்பதே எனது கவலையாகும். ஆனால் நாம் முயற்சித்தோம். உண்மை எதுவெனில் நாம் இருபுறத்து தீவிரவாதிகளால் தாக்கப்பட்டோம். அதையிட்டு நான் கவலையடையவில்லை. சிங்கள பேரினவாதிகள் நான் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக இருந்ததாக கூறிய அதேவேளை விடுதலைப்புலிகளின் தோல்விக்கே நானே தனிப்பட்ட முறையில் காரணம் அல்லது போரின் இறுதிக் காலத்தில் ஏற்பட்ட தமிழ் சிவிலியன்களின் மரணத்திற்கு நோர்வே நாடு பொறுப்பானது என தமிழ்த் தீவிரவாதிகள் குற்றம் சாட்டினர்.

மொத்தத்தில் போரை உக்கிரப்படுத்தியவர்களையே முதலில் குற்றம் சுமத்தவேண்டுமே தவிர சமாதானத்தை ஏற்படுத்த செயற்பட்டவர்களை அல்ல. சமாதானத்தை ஏற்படுத்தும்படி கடவுள் எம்மிடம் எதிர்பார்த்தார். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அதனையே எம்மிடம் எதிர்பார்த்தனர்.

வினா :சமாதான தூதுவராக செயற்பட்ட வேளையில் உங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட விமர்சனங்களை அவதானிக்கையில் போதும், போதும் என்ற எண்ணம் எப்போதாவது ஏற்பட்டதா?

விடை : ஒருபோதும் இல்லை. மக்கள் எம்மை விமர்ச்சிப்பதை நாம் பொருட்டாகக் கொள்வதில்லை. அவை சாதாரண ஒன்றே. இம் முழு முயற்சியின்போது இரு சாராரின் நம்பிக்கையைப் பெறுவதே எமது கவனமாகும். குறிப்பாக சமாதானத்தை எதிர்பார்ப்பவர்களின் நம்பிக்கையாகும். நாம் பிரபாகரன், பாலசிங்கம் மற்றும் விடுதலைப்புலி தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தோம். அதே போலவே சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ஸ போன்ற அரசின் முக்கிய தலைவர்களின் நம்பிக்கையையும் பெற்றிருந்தோம். அவர்களின் நம்பிக்கை எம்மீது இருக்கும் வரை அங்கங்கு எழும் விமர்சனங்களை நாம் பொருட்படுத்தவில்லை.

வினா: நீங்கள் விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக உரையாடிய தருணங்களின் அடிப்படையில் அவர்கள் உண்மையில் சமாதானத்தை எட்ட எண்ணுவதாக உணர்ந்தீர்களா?

விடை :முழுமையாக நம்பினேன். ஆனால் தெற்கில் அது தவறாகப் புரியப்பட்டிருந்தது. விடுதலைப்புலிகள் அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் வேளையில்தான் சமாதானத்தில் ஈடுபட்டார்கள். 2000-2001 ம் ஆண்டுகாலத்தில் அவர்கள் மிகவும் பலமாக இருந்தனர். ஆனையிறவில் பெரு வெற்றி பெற்றனர். யாழ் குடாநாட்டினை முழுமையாகக் கைப்பற்றும் நிலையில் இருந்தனர்.

இறுதித்தருணத்தில் பாகிஸ்தானின் உதவி கிட்டியதால் அரசு வெற்றிபெற்றது. பண்டாரநாயக்கசர்வதேச விமானத் தளத்தினைத் தாக்கியதன்மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தினர். இவ்வாறு அவர்கள் மிகவும் பலமாக இருந்த வேளையில்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இவை விடுதலைப்புலிகள் சமாதானத்தில் விசுவாசமாக இருந்தமையை நன்கு உணர்த்தின. ஆனால் அவர்கள் சமஷ்டித் தீர்வு வரை செல்லத் தயாராக இருந்தார்களா? என்பது கேள்விக்குரியதே. எனது எண்ணப்படி பிரபாகரன் உண்மையிலேயே சமாதானத்தை விரும்பினார். சமாதானத்தை அடையத் தயாராக இருந்தார்.ஆனால் அதற்காக அதில் விட்டுக்கொடுப்புகள் தேவையாக இருந்தன.

வினா : விடுதலைப்புலிகள் தம்மைப் பலப்படுத்திக்கொள்ளவும், ராணுவ பலத்தைக் கூட்டிக் கொள்ளவும் சமாதான காலத்தைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. நோர்வேயும் அவர்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக உதவியதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் ஏதாவது உண்மையுள்ளதா?

பதில் :முற்றிலும் தவறு. நாம் எத் தரப்பிற்கும் அன்பளிப்புகளை வழங்குவதோ அல்லது கொடுப்பதோ இல்லை. ஆனால் இது தெற்கில் இவ்வாறான தவறான புரிதல் காணப்பட்டது. இலங்கை ராணுவம் இச் சமாதான காலத்தில் தம்மை விடுதலைப்புலிகளை விட மிக அதிகளவில் பலப்படுத்தினர். இதனை இறுதிப் போர்க் காலமான 2007 ம் 2009ம் ஆண்டுகாலத்தில் நாம் அவதானிக்க முடிந்தது.

உலகின் பல நாடுகளின் அவை இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா என்பவற்றின் ஆதரவை இலங்கை பெற்றிருந்தது. இந் நாடுகள் அனைத்தும் சமாதானத்தையே விரும்பின. ஆனால் அவர்களின் தெரிவு என்பது இலங்கை அரசா?அல்லது விடுதலைப்புலிகளா?என்ற நிலையில் அவர்கள் அரசு என்ற வகையில் அரசின் பக்கம் சென்றனர். இதிலிருந்து தமது பக்கத்தைப் பலப்படுத்தியது அரசே தவிர விடுதலைப்புலிகள் அல்ல.

வினா :சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஈடுபடும்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலர் கோதபய ஆகியோரிடம் பேசி சமாதானத்தை ஏற்படுத்துவது சிக்கலானதாக அமைந்ததா?

விடை :மகிந்த 2005ம் ஆண்டுபதவிக்கு வந்தார். அவ் வேளையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான தெளிவான திட்டங்கள் அவரிடம் இருக்கவில்லைஎன எண்ணுகிறேன். அவர் எங்கள் ஆலாசனைகளைக் கேட்டறிந்தார். அவரது பக்கமாக நின்று நியாயமாகப் பார்க்கையில் அவரும் சிக்கலுக்குள் தள்ளப்பட்டிருந்தார். ஏனெனில் பிரபாகரன் அவரை அவ் வேளையில் சிக்கலுக்குள் தள்ளியிருந்தார். விடுதலைப்புலிகள் வடக்கின் தெருவோரங்களில் குண்டுகள் வைத்து ராணுவத்தினரைக்கொலைசெய்தனர்

வினா : ஜெனீவாவில் தமது உதவியாளர்கள் மூலமாக இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை பிரபாகரன், மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் நடத்தினர். அவ்வேளையில் தாம் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முழுமையாகத் தயார் என எனக்குத் தெரிவித்திருந்தார். ஆனால்அவர் மிக நீண்ட சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவிரும்பவில்லை. நாம்இன்று எதிர்பார்ப்பதைப் போன்ற நிலமைகள் 2006ம் ஆண்டில் இருக்கவில்லை. அவை முற்றிலும் வித்தியாசமானவை. அதுவே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான இறுதி வாய்ப்பாக அமைந்ததாக எண்ணுகிறேன். எனவே இவை பிரபாகரனுடன் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்ஸ தயாராக இருப்பதாக பிரபாகரனுக்குதெரியப்படுத்திய முறை எனக் கருதுகிறீர்களா? அவரது பதில் எவ்வாறாக இருந்தது?

பதில் : உண்மையில் இவை எவையும் அவ்வேளையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால்நாம் தற்போது பகிரங்கமாகப் பேச முடியும். சமாதானத்தை அடைவதற்கு இரண்டு வெவ்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டன. விடுதலைப்புலிகள் படிப்படியாக தொடர விரும்பினர். ஏனெனில் அவ்வாறான அணுகுமுறையில் படிப்படியாக நம்பிக்கையை வென்றெடுப்பது, அதன் மூலம் இருசாராரும் சமாதானத்தை இணைந்து முன்னெடுப்பது என்பதாகும்.

ஆனால்இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை மிகவும் வேகமாக முன்னெடுத்து அதாவது சுயாட்சி, சுயாதிபத்தியம், இலங்கை என்ற ஒற்றை அரசு ஆட்சிக்குள் தமிழர்களுக்கான சுய அரசு அல்லது சுயநிர்ணய உரிமைஎன்பவற்றைப் பேசி முடிவு செய்வது என அவர்கள் கருதினர். தனிநாடு என்பது ஒருபோதும் நிகழ்வுகளில் இடம்பெறவில்லை.

பேச்சுவார்ததைகளின் விளைவு அதுவாகவும் இருந்ததில்லை. அதாவது இவற்றிற்குமத்தியில் ஏதாவதாக இருக்கலாம். அதுவே சமஷ்டி ஆகும்.இலங்கையர்கள் சமஷ்டி மூலம் ஆறுதலடைய முடியும்என எண்ணுகிறேன். இதனை வளைகுடா அடங்கலிலும் காணலாம். சமஷ்டி என்பது இந்தியாவில் மிகச் சிறப்பாக செயற்படுகிறது. பிராந்திய அரசுகள் டெல்கியின் தலையீடு அற்று தமது கருமங்களைத் தாமே கவனிக்கும் அதேவேளை ஐக்கிய இந்தியாவின் ஒருபகுதியாகவும் செயற்பட முடிகிறது.

வினா :இந்தியா இப் பிரச்சனையில் பாரிய பங்கைச் செலுத்தலாமென எண்ணுகிறீர்களா?

விடை :இச் சமாதான முயற்சிகளின் முழுப் பாதையிலும் இந்தியாவின் பங்களிப்பு காத்திரமாக இருந்தது. பேச்சுவார்த்தை மூலமான தீர்வைத் தவிர வேறு எந்த வாய்ப்புகளும் இல்லை என இந்தியா தொடர்ச்சியாகத்தெரிவித்திருந்தது. 2008ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தின் பின்னர் அவர்களது எண்ணம் மாறியிருந்தது. ராணுவ அணுகுமுறையே பொருத்தமானது எனக் கூறினர். ஏனெனில் இலங்கை அரசு போரை வெல்வதற்கான நிலமைகள் காணப்பட்டன. அப்புள்ளி வரையான காலம் வரை இந்தியா பேச்சுவார்த்தை மூலமான தீர்வுகளில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தது.

போரின் இறுதிக்காலத்தில் இந்தியா ராணுவ உதவிகளை மேற்கொண்டது உண்மையானதாகும். ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற வேளையில் இந்தியா சமாதானத்தை ஏற்படுத்துவதில் ஆதரவாகவே செயற்பட்டது. இதில் சந்தேகமே இல்லை.

வினா :கடந்த காலத்தைப் பின்னோக்கும்போது நோர்வே சமாதான அனுசரணையாளர் என்ற அடிப்படையில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக வித்தியாசமாகச் செயற்பட்டிருந்தால் போர் அமைதியான முறையில் தணிந்திருக்குமல்லவா?

பதில்: நான்பல தடவைகள் இதனை எனது கவனத்தில் மீட்டெடுத்தேன். இவை மார்க் சோல்ரர் வெளியிட்ட ‘சிவில் யுத்த முடிவை நோக்கி’என்ற நூலில் விபரமாக உள்ளது. சமாதானத்தை அடைவதில் இரண்டு தடைகள் இருந்ததாக எண்ணுகிறேன். கொழும்பில் இவை குறித்து இறுக்கமான பார்வை இருக்கவில்லை.

அதாவது ஐ தே கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றிற்கிடையேயானதாகும். ஓவ்வொரு பிரச்சனையிலும் போரே காணப்பட்டது. சந்திரிகா ஒன்றை மேற்கொண்டால் ரணில் ஆதரிப்பதா? அல்லதுமறுபக்கமாக செல்லும் நிலமைகள் காணப்பட்டன. இக் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட முரண்பாடுகள் ஓர் தெளிவான தீர்வு ஒன்றை விடுதலைப்புலிகளிடம் வழங்க முடியவில்லை.

அத்துடன் இவ்வாறான முரண்பாடுகள் காரணமாக இக் கட்சிகள் சமஷ்டித் தீர்வை வழங்கினும் தொடர்ச்சியாக அம் முடிவைத் தொடர்வார்களா? என்பதில் விடுதலைப்புலிகளுக்குச் சந்தேகம் இருந்தது. இவ் இரு கட்சிகள் மத்தியில் காணப்பட்டமுரண்பாடுகளை எம்மால் தீர்க்க முடியவில்லை. இவை குறித்து இந்தியாவுடன் நாம் நெருக்கமாகச் செயற்பட்டிருந்தால் அதனைச் சாதித்திருக்க முடியும் என நம்புகிறேன்.

இரண்டாவதாக இப் பிரச்சனைக்கான தீர்வாக சமஷ்டி என்பதை பிரபாகரனை ஏற்கவைக்க முடியவில்லை. நாம்மேலும் அதிக அளவில் பிரபாகரனுடன் பேச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். உலகில் நான் மட்டுமே பிரபாகரனுடன் அதிக அளவு பேசிய தமிழரல்லாத ஒருவராகும். மிகக்குறைவானவெளிநாட்டவரே அவரைச் சந்தித்துள்ளனர். இதுவே அவர் குறித்த தவறான புரிதலை உலகத்திற்கு வழங்க வாய்ப்பளித்தது. அவரும் வெளி உலகம் பற்றிப்புரிந்துகொள்ளவில்லை. வெளிநாட்டவர்கள் பலர் அவரைச் சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் ஒருவேளை அவர் இணங்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் இலகுவாக அமைந்திருக்கலாம். தீர்வு தேவையெனில் இரு சாராரும் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

வினா: பிரபாகரன்உங்களுடன் பேசிய தருணங்களில் அவரது ஆர்வம் போர்மீது காணப்பட்டதா? அல்லது உலகத்தில் வாழும் ஏனையோர் அனுபவிக்கும் சந்தோஷங்களை அறிவதில் ஆர்வம் காட்டினாரா? பிரபாகரன்என்ற மனிதருடன் அதிக அளவில் உரையாடிய ஒருவர் என்ற வகையில் அதனை எமக்கு விளக்குங்கள்.

விடை : போரின் இறுதிப் பகுதி வரை அவர் தேர்ந்த நீண்ட காலராணுவத் தலைவர். விடுதலைப்புலிகள் என்ற ஒரே ஒரு அமைப்பே உலகில் முதன் முறையாக கடற்படை மற்றும் சொந்த விமானப்படையைக் கொண்டிருந்தார்.

ஆனால்அரசியல் குறித்து அவர் இதைவிட மிகவும் குறைவாகவே தெரிந்திருந்தார். இலங்கையின் தென்பகுதி அரசியல். இந்தியா, மற்றும் வெளி உலகு தொடர்பாக மிகவும் குறைந்த புரிதலே அவருக்கு இருந்தது. புலம்பெயர் தமிழர்களில் பலர் தவறான ஆலோசனைகளையே அவருக்கு அளித்தனர்.

பிரச்சனையிலிருந்து வெளியேறும் முயற்சிகளுக்குப் பதிலாக எவ்வித இணக்கப்போக்கு அற்ற இறுக்கமான நிலைப்பாட்டில்; இருக்கும்படிஆலோசனை வழங்கினர். ஆனால்அவர் தான் அளித்த சகல வாக்குறுதிகளிலும் உண்மையாக இருந்தார் என்பது புகழுக்குரியது. எப்போதெல்லாம் போர் நிறுத்தமென அறிவித்தாரோ, அப்போதெல்லாம் முழுமையாக நிறைவேறியது. தனது படைகளின் முழுக்கட்டுப்பாடும் அவரிடமிருந்தது.

பாலசிங்கம் அவரது முழுமையான நம்பிக்கைக்கு உரியவராகவும், பிரதான ஆலோசகராகவும் இருந்தார். அவர் பாலசிங்கத்தின் ஆலோசனைக்கிணங்க எடுத்த முடிவுகள் யாவும் சரியாகவே நிறைவேறின. அவரின்ஆலோசனையைக் கவனத்தில்கொள்ளாத தீர்மானங்கள் பிழையாகவே நடந்தேறின. தனிமனிதர் என்ற வகையில் அவர் சிறந்த சமையல்காரனாகவே செயற்பட்டார். நாமிருவரும் நல்ல உணவுகளைப் பரிமாறினோம். ஆனாலும் அவர் தன்னை மிகவும் பாதுகாப்புடன் நடத்தியதால் அவரிடம் மிக நெருக்கமாகச் செல்ல முடியவில்லை.

வினா : நீங்கள் சமீபத்தில் வெளியிட்ட‘ருவிட்டர்’பக்கத்தில் ஏனையவர்களைவிட பாலசிங்கத்தின் சிந்தனை எவ்வாறிருக்கும்? என்பதை ஏனையவர்களைவிட நீங்கள் நன்கு உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். விடுதலைப்புலிகளின் தாக்குதல் திட்டங்களை முன்கூட்டியே பாலசிங்கம் தெரிந்திருந்திருந்தார் என அவர்களது திட்டமெதையும் தெரிவித்தாரா?

பதில்: நிச்சயமாக இல்லை. ஏனெனில் பாலசிங்கம் இவ்வாறானராணுவ திட்டமிடுதல்களில் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒருபோதும் பங்களித்திருக்கவில்லை. பாலசிங்கம் சாதாரண சிவிலியன்என்ற அடிப்படையில் பிரபாகரனுக்கு ஆலோசகராகச் செயற்பட்டார். அவர் தெற்கை எவ்வாறு புரிந்து கொள்வது? உலக நடைமுறைகளைப்புரிந்துகொள்ளல். சமாதானத்தை நோக்கி எவ்வாறு செல்வது? என்பது பற்றிய ஆலோசனைகள் வழங்கினார். முடிவாகக் கூறினால் பாலசிங்கமே சமாதான முயற்சிகளின் அடிக்கல்லாக அமைந்தார். அவரால் மட்டுமே நிலமைகள் முன்னோக்கி நகர்ந்தன.

பிரபாகரன்பல விடயங்களில் பாலசிங்கத்தின் ஆலோசனைகளைக் கேட்டிருந்தால் நிலமைகள் வேறுவிதமாக அமைந்திருக்கும். விடுதலைப்புலிகள் கிழக்கை இழக்கக்கூடும் என பாலசிங்கம் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். வடக்கையும் இழக்கலாம் என்பது பாலசிங்கத்தின் முயற்சிகளைப் பிரபாகரன் தடுத்த நிகழ்விலிருந்து புரிய முடிந்தது. சமாதான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதும், பதிலாக புதிய ராணுவ தந்திரோபாயங்களைத் தவிர்ப்பதும் அவசியமானது என அவர் தெரிந்திருந்தார்.

வரலாற்றில் இவை இவ்வாறு அமைந்திருந்தால் எனப் பல கதைகளை நீங்கள் அறிவீர்கள். விடுதலைப்புலிகள் பாலசிங்கத்தின் அறிவுரைகளைப் பின்பற்றியிருந்தால் இலங்கைத் தமிழர்கள் இன்று நல்ல நிலையில் இருந்திருப்பார்கள். ஒரே இலங்கை நாட்டில் வடக்கில் சுயாட்சியைஅனுபவித்திருக்க முடியும்.

வினா : தளத்திலிருந்த விடுதலைப்புலிகளிடம் எப்போது, எவை பற்றிப் பேசினீர்கள்?

விடை : எமது இறுதி உரையாடல்கள் 2009ம் ஆண்டு மே 17ம் திகதி இடம்பெற்றது. சமாதானச்செயலகத்தில் செயற்பட்ட புலித்தேவன் எம்மோடு தொடர்பு கொண்டு விடுதலைப்புலிகள் ராணவத்திடம் சரணடைய விரும்புகிறார்கள் எனவும், அதற்கு உதவிபுரியுமாறும் கேட்டனர். போர்க்களத்தில் உதவி புரிவதற்கான கால அவகாசம் போதாது எனத் தெரிவித்தோம். அவ்வாறு ஒருபோதும் மேற்கொண்டதில்லை. பாரிய வெள்ளைக் கொடியுடனும், ஒலிபெருக்கி மூலமான அறிவித்தல்களுடனும் உங்கள் எண்ணங்களை வெளிப்படையாக விளக்கி சரணடைய விரும்புவதாக தெரிவிக்குமாறு ஆலோசனை வழங்கினோம். அப்போது உங்கள் எண்ணங்களை நாம் இலங்கை அரசிற்கு அறிவிக்க முடியும் என்றோம்.

அதன் பிரகாரம் நாம் இலங்கை அரசிற்கு அறிவித்தோம். ஏனையவர்களும் அவ்வாறே செய்தார்கள். சில இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும், சில தூதுவர்களும் இதில் ஈடுபட்டனர். இலங்கை அரசிற்கு முறைப்படி அறிவிக்கப்பட்டிருந்தது. மறுநாள் புலித்தேவன், விடுதலைப்புலிகளின் பொலீஸ் பொறுப்பாளர் நடேசன் என்போர் கொலை செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி எமக்குக் கிடைத்தது. எவ்வாறான சூழலில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்?என்ற விபரங்கள் எமக்குத் தெரியாத போதிலும், இலங்கை ராணுவத்தால் மிக இரத்தம் சிந்தும் வகையில் கொலை செய்யப்படமாட்டார்கள் என நம்புவது மிகக் கடினமாக இருந்தது. அவ்வாறு நடந்திருப்பின் அது போர்க் குற்றமே. மக்கள் சரணடைய விரும்பும் வேளையில் அவர்களுக்கு அவ்வாறான ஏற்பாடு வழங்கவேண்டும். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வினா :உங்களுக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம் பிரபாகரனும் சரணடைந்தாரா?

விடை : அதைப்பற்றிய தகவல்கள் என்னிடம் இல்லை. சகல அடையாளங்களையும் அவதானிக்கையில் அவரும் அவரது குடும்பமும் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இதில் வியப்புக்குரிய அம்சம் எதுவெனில் நாம் இப் பிரச்சனையைஅவ் வேளையில் தீர்ப்பதற்கான சிலவாய்ப்புகளை வழங்கினோம்.

அந்த வாய்ப்பு என்பது எம்மாலும், அமெரிக்க, இந்தியதரப்பாலும் விபரிக்கப்பட்டது. அது மிகவும் பலமான வாய்ப்பு ஆகும். போரை வெல்ல முடியாது என்பதை நாம் பிரபாகரனுக்கு மிகவும் தெளிவாக உணர்த்தியிருந்தோம்.

நாம்வழங்கிய வாய்ப்பு எதுவெனில் ஒவ்வொரு சிவிலியன்களும், போராளிகளும் முதலில் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பெயர்கள் பதிவு செய்யப்பட்ட பின் தெற்கை நோக்கி அல்லது வெளிநாட்டிற்குக் கப்பலில் எடுத்துச் செல்லப்படுவர். இதற்கு இந்தியாவினதும், அமெரிக்காவினதும் பக்கபலம் இருந்தது. சகலரும் தம்மைக் கையளித்த பின் யாருமே பாதிக்கப்படமாட்டார்கள். இதில் நாம் மிகவும் நம்பிக்கை செலுத்தியிருந்தோம். ஆனால் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரபாகரன் இத் திட்டத்தை நிராகரித்தார். இதன் விளைவாக முக்கிய தலைவர்கள் எவரும் தப்பிக் கொள்ளாதது மட்டுமல்ல பல ஆயிரம் மக்களும் மடிந்தார்கள்.

வினா :இலங்கை போரின் பின்னர் மீள் கட்டுமானம் செய்யப்படுகிறது. விடுதலைப்புலிகள் இரண்டிற்கும் வாய்ப்பளிக்காத நிலையில் ராணுவ நடவடிக்கை மட்டுமே தெரிவாக இருந்ததாகக்கருதுகிறீர்களா?

விடை :முதலில் சமாதானத்தை நாம் கொண்டாட வேண்டும். சமாதானம் மிக அவசியமானது. மக்கள் தமது வாழ்க்கையை மீளமைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கை தீர்வாக முடியாது என எண்ணுகிறேன். இணக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் எனநம்புகிறேன். இலங்கை அரசியல் அடிப்படையில் இன்னமும் பிளவுபட்டுள்ளதையும் தீர்க்கப்படவில்லை என்பதனையும் ஞாபகமூட்ட விரும்புகிறேன். இலங்கை அரசிற்குள் தமிழர்கள் இன்னமும் இரண்டாம் தர பிரஜைகளாக உணர்கிறார்கள். இதனை சிங்கள மக்கள் இன்னமும் உணராமலேயே உள்ளனர். இருப்பினும் அங்கு குறைந்த பட்சம் சமாதானம் நிலவுகிறது. இலங்கை பொருளாதார அடிப்படையில் அபிவிருத்தி செய்யவேண்டியுள்ளது.

இலங்கையில் பல நேர்மறையான அம்சங்கள் உள்ளன. உதாரணமாக கல்வி, சுகாதாரம் என்பவற்றோடு மக்கள் அமைதியாக வாழக்கூடிய மிகவும் அழகான இடமாகும்.

ராஜபக்ஸாக்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளார்கள். தமிழர்களை அணுகிச் சென்று நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கான தருணம் இதுவாகும்.

 

(மூலம் : டிபி எஸ் ஜெயராஜ் தமிழில் : வி. சிவலிங்கம்)

Share.
Leave A Reply

Exit mobile version