கண்டியில் கடந்தவாரம் ஏற்பட்ட நில அதிர்வுகள் இயற்கையான நிகழ்வு என புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, திகனவில் ஏற்பட்ட நடுக்கம் பூமிக்குள் ஆழமான சுண்ணாம்புக் கற்களின் இரண்டு அடுக்குகளுக்கு இடையில் கட்டமைக்கப்பட்ட அழுத்தத்தினால் ஏற்பட்ட வெடிப்பின் விளைவாக ஏற்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் இரண்டிற்கும் குறைவான சிறிய நடுக்கங்கள், கடந்த சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமையில் கண்டியின் திகன உட்பட பல பகுதிகளில் பதிவாகியிருந்தது.
இந்த அதிர்வு தொடர்பாக ஆய்வினை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட புவியலாளர்கள் குழு வகுத்த அறிக்கை நேற்று கிடைக்கப்பெற்ற நிலையில் அதில் இந்த விடயம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த பணியகத்தின் தலைவர் அனுரா வால்போலா தெரிவித்துள்ளார்.
இந்த நில அதிர்வுகள் இயற்கையானதாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட காரணங்களால் ஏற்பட்டதா என்பதைத் தீர்மானிக்க குறித்த குழு நியமிக்கப்பட்ட நிலையில் பூமியின் கீழ் அழுத்தத்தை உருவாக்குவதால் இது இயற்கையான நிகழ்வு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நில அதிர்வு இடம்பெற்ற பகுதியில் எதிர்காலத்தில் இன்னும் சிறிய நடுக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும், எனினும் இதுபோன்ற குறைந்த அளவிலான அதிர்வலைகள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்னாறும், எதிர்காலத்தில் தொடர்புடைய பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணிக்க புவிச் சதரவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் அங்கீகாரம் தேவைப்படும் என அனுரா வால்போலா சுட்டிக்காட்டியுள்ளார்.