பெங்களூரு நகரின் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சி செய்யச் சென்றபோது தானும், தனது நண்பர்களும் தாக்கப்பட்டதாகவும், கவிதா ரெட்டி என்பவரால் கடுமையாக ஏசப்பட்டதாகவும் நடிகை சம்யுக்தா ஹெக்டே புகார் தெரிவித்துள்ளார்.

சம்யுக்தா ஹெக்டே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் ஒரு காணொளியும் வெளியிட்டுள்ளார்.

தாங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர்கள் கூறுவது தவறு என்று சம்யுக்தா அதில் கூறுவதும், பொது வெளியில் சம்யுக்தா தேவை இல்லாமல் பிரச்சனை செய்வதாக காவல் அதிகாரி ஒருவர் கூறுவதும் அதில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், சம்யுக்தா மற்றும் அவரது தோழிகள் தம்மைத் தரக்குறைவாகப் பேசியதால்தான் தாம் கோபமடைந்ததாக கவிதா ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’, ‘பப்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை சம்யுக்தா.

சமீபத்தில் இவரும் இவர் நண்பர்களும் பூங்காவில் உடற்பயிற்சி செய்யச் சென்றுள்ளனர். இவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்துள்ள கவிதா ரெட்டி, இவர்களை நோக்கித் திட்டியபடியே, நீங்கள் கவர்ச்சி நடனமாடுபவர்களா என்று கேட்டுத் தாக்க முயன்றதாக இவர் குற்றஞ்சாட்டுகிறார்.


“எங்கள் மூன்று பேர் அருகில் வந்த கவிதா ரெட்டி, நாங்கள் தவறான உடை அணிந்துள்ளோம் என்றும், உடற்பயிற்சி செய்வதற்குப் பதிலாக கேப்ரே நடனம் ஆடுவதாகவும் சொன்னார். மேலும் தற்போது கன்னடத் திரையுலகில் சர்ச்சையாகியுள்ள போதை மருந்து விவகாரத்தில் எங்கள் பெயரைச் சேர்ப்பதாகவும் மிரட்டினார்,” எனவும் குற்றஞ்சாட்டுகிறார் சம்யுக்தா.

ஸ்போர்ட்ஸ் ப்ரா என்பது தவறான உடையா என்றும் சம்யுக்தா அந்தக் காணொளியில் கேட்கிறார்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக கவிதா ரெட்டி அளித்துள்ள விளக்கத்தில் என்னை சம்யுக்தாவும் அவரது தோழிகளும் தரக்குறைவாக பேசினர். அதனால் கோபமடைந்தேன் என்கிறார்.

கவிதா ரெட்டி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் அவர் நாங்கள் அந்த ஏரியை 10 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம், அங்கு தினமும் அதிக சத்தம் வைத்து பாடல் கேட்டு சம்யுக்தா மக்களூக்கு இடையூறு செய்கிறார் என அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version