குணப்படுத்த முடியாத கொடிய நோய் (incurable disease) ஒன்றினால் சுமார் 34 ஆண்டுகள் படுத்த படுக்கையில் வாடும் நோயாளி ஒருவர் தானாகவே உயிர் துறப்பதற்கு முடிவு செய்திருக்கிறார்.

மருத்துவப் படுக்கையில் கிடந்தவாறு பெற்றுவரும் நீராகார உணவினையும் மருந்துகளையும் நிறுத்திக் கொண்டு மெதுவாகச் சாவதற்குத் தயாராகும் முடிவை முகநூல் நேரலை மூலம் நாட்டுக்கு அறிவித்திருக்கும் அவர், தான் சாகும் வரையான நிலைமைகளை தொடர்ந்து அனைவரும் காண வசதியாக அதனை முகநூலில் நேரலைக் காணொலியாக விட்டிருக்கிறார்.

சட்டங்களுக்கும் மனிதாபிமானத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கும் ஒரு நோயாளியின் இந்த அவலம் பிரான்ஸ் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறது.

டிஜோன் (Dijon)பிராந்தியத்தைச் சேர்ந்த 57 வயதான அலெய்ன் கோக் (Alain Cocq) என்ற நோயாளியே உயிர் துறக்கப் போவதான முடிவை வெள்ளிக்கிழமை இரவு முகநூல் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார்.

மிக அரிதானதும் வாழ்நாள் முழுவதும் குணப்படுத்த முடியாததுமான இரத்த நாள நோயினால் பீடிக்கப்பட்டு 34ஆண்டுகள் படுத்த படுக்கையில் கிடக்கும் இவர் தனது வலி நிறைந்த வாழ்வை நிறைவு செய்யக்கோரி நீண்ட காலமாகப் போராடி வருகிறார்.

அநாதை நோய்கள் (orphan disease) என அறியப்படும் இவ்வகை நோய் உள்ளவர்கள் இடைவிடாத சிகிச்சைகளுடன் காலம் முழுவதும் பாரிசவாதம் போன்று படுத்த படுக்கையிலேயே அநாதை போன்று வாழ்நாளைக் கழிக்கவேண்டி இருக்கும்.

பெரும் வலியுடன் கூடிய தனது இந்த வாழ்வை நிறைவுசெய்வதற்கு விரும்புகிறார் அலெய்ன். தன்னைப் போன்றே நாட்பட்ட கொடிய நோய்களால் சதா செத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு விடிவைப் பெற்றுக் கொடுக்கப்போவதாகக் கூறுகிறார் அவர். இறப்பதற்கான உரிமையைக் கோரும் இயக்கம் ஒன்று, (the Association for the Right to Die in Dignit) அவருக்காக சமூக வலைத்தளங்களில் மக்களின் ஆதரவைத் திரட்டி வருகிறது.

உயிர் துறப்பதற்கு உதவுமாறு கோரி நாட்டின் அதிபர் மக்ரோனிடம் இறுதியாக விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்ளாததை அடுத்தே உணவையும் மருந்துகளையும் துண்டித்துக் கொண்டு தானாகவே தனது உயிரை மெதுவாக மாய்க்க முடிவு செய்துள்ளார் அலெய்ன் கோக்.

ஒருவரது ஆயுள் காலம் முடிவை நெருங்கும் கட்டத்தில் கடும் நோய் உபாதையைத் தவிர்ப்பதற்காக அவரை ஆழ் மயக்கத்துக்கு உட்படுத்த பிரெஞ்சு சட்டங்களில் இடம் உண்டு. வாழ்வின் முடிவு தொடர்பான Claeys-Léonetti சட்டங்களில் 2016 இல் செய்யப்பட்ட இணைப்புகள் இதற்கு இடமளிக்கின்றன.

ஆனால் அலெய்ன் கோக் விடயத்தில் அவர் தான் தொடர்ந்து 34ஆண்டுகள் நோய் வலியால் துன்புறுவதாகக் கூறினாலும் ஆயுள் காலம் முடிவடையும் வயதை அவர் இன்னமும் நெருங்கிவிடவில்லை என்று சட்டத்தரப்புகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.

எவரும் விரும்பித் தாமாகவே சாவதற்குச் சட்டங்களில் இடம் இல்லை. “நான் சட்டத்துக்கு மேலானவன் அல்லன் என்று தெரிவித்து அலெய்னின் சாவுக் கோரிக்கையை மக்ரோன் நிராகரித்து விட்டார்.

இதனால் தற்போது தானாகவே சாகும் தற்கொலைக்குச் சமனான- முடிவை எடுத்துக் கொண்டு அதனை உலகத்துக்கு அறிவித்துவிட்டு செத்துக்கொண்டிருக்கிறார் அலெய்ன்.

எனது கண்கள் வழி தெரியும் வலியை அனைவரும் காணவேண்டும். உடலின் சிறையில் வாழ நான் விரும்பவில்லை. நான் வெளியேறும் முடிவு எனக்கு ஒரு விடுதலையாக இருக்கும். எனக்குப் பிறகும் (சாவதற்கான) இந்தப் போராட்டம் தொடரும் என்று அலெய்ன் கோக் தனது இறுதிக் காணொளி உரையில் தெரிவித்திருக்கிறார்.

சட்டங்களும் மருத்துவ உலகமும் என்ன செய்யப் போகின்றன? ஒரு நோயாளியின் தற்கொலையை வெறுமனே பார்த்து நிற்குமா? அல்லது தடுத்துநிறுத்தப் போகின்றனவா?

நாட்டின் ஊடகங்கள் இந்தக் கேள்வியை எழுப்புகின்றன.

நோயாளி ஒருவர் எடுத்துள்ள இந்த வேதனையான தீர்மானம், வாழ்வின் முடிவு (End of life) தொடர்பான சட்டங்கள் மீதும் கருணைக் கொலை அல்லது சாவதற்கான உரிமையை சட்டத்தில் சேர்க்கக் கோரும் விவகாரம் மீதும் மீண்டும் விவாதங்களை எழுப்பி இருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் எத்தகைய சூழ்நிலையிலும் சமூக வலைத்தளங்கள் எவருக்கும் ஒரு பக்க பலமாக மாறிவிடுகின்றன. அலெய்னினது சாவின் கட்டங்கள் முகநூல் வழியே நேரலையாகிக் கொண்டிருக்கின்றன.

இது எதுவரை தொடரும்?

பிரபல சமூகவலைத்தளமான முகநூலின் சட்டங்கள் ஒரு நோயாளியின் தற்கொலை பொது வெளியில் பகிரங்கமாக ஒளிபரப்பாகுவதை தொடர்ந்து அனுமதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முகநூல் நிர்வாகம் இதனை தடை செய்யுமா?

முகநூல்(Face Book) நிறுவனத்தின் பிரெஞ்சு முகாமைத்துவம் இந்த விடயத்தில் ஒரு தீர்மானத்தை அடுத்து வரும் நாட்களில் எடுக்கவேண்டி இருக்கும்.

சட்டங்களா அல்லது இந்த மனிதனின் மரணமா வெல்லப்போவது யார் என்பதை அறிய முழுநாடும் காத்திருக்கிறது.

பிந்திய குறிப்பு:

முகநூலின் பிரான்ஸ் நிர்வாகம் அலெய்ன் கோக்கின் நேரலையை இன்று மதியம் முதல் முடக்கியுள்ளது. இத்தடை எதிர்வரும் 8ஆம் திகதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிக்கலான இந்த விவகாரத்தில் அவர் தனது முடிவின் பக்கம் கவனத்தை ஈர்க்க விரும்புவதை மதிக்கின்ற அதேவேளை, தற்கொலை முயற்சிகளைக் காட்சிப்படுத்த அனுமதிப்பதில்லை என்ற விதிகளின் கீழ் நிபுணர்களது ஆலோசனையுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று முகநூல் நிர்வாகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version