நுவரெலியா சுற்றுலா விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஜா எல-கொடுகொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 31ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், காலில் ஏற்பட்டிருந்த காயம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றின் காரணமாக இவர் கடந்த 2ஆம் திகதி நுவரெலியா அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவர் இலங்கைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஒருவகை வைரஸினால் இவர் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வைத்தியசாலையொன்றிலும் சிகிச்சைப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.