இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது.

திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

குறிப்பாக கொழும்பு நகரில் யாசகம் பெறுவதை பலரும் தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற பிபிசி தமிழ் கொழும்பின் பிரதான வர்த்தக பகுதிகளான செட்டியார் தெரு மற்றும் மெயின் வீதி ஆகிய பகுதிகளை ஆராய்ந்தது.

ஆண்கள், பெண்கள் மாத்திரமன்றி, சிறார்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதை அங்கு காண முடிகின்றது.

செட்டியார் தெரு பகுதியில் சுமார் 1500ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.
கொழும்பு யாசகரின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா?

இங்குள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பிச்சைக்காரர்களுக்கு வழங்குவதற்காக நாளொன்றுக்கு சுமார் 300 ரூபா முதல் 500 ரூபாய் வரை 2 ரூபாய் நாணயங்களாக மாற்றி வைப்பதை வழக்கான ஒரு விடயமாக அவர்கள் செய்கின்றனர்.

வர்த்தக நிலையங்கள் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது முதல் பிச்சைக்காரர்கள், இந்த பகுதியிலுள்ள சுமார் 1500ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு சென்று யாசகத்தை பெறுகின்றனர்.

’ஆயிரக்கணக்கில் வருமானம்’

ஒரு பிச்சைக்காரருக்கு, ஒரு வர்த்தக சுமார் 2 ரூபாய் வழங்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

1500 வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பிச்சைக்காரர்களுக்கு ஒரு வர்த்தக நிலையத்தில் தலா 2 ரூபாய் வழங்கப்படுகின்றது என்றால், செட்டியார் தெரு பகுதியில் மாத்திரம் சுமார் 3000 ரூபா வரை அவர்களுக்கு கிடைக்கிறது.

இதையடுத்து, குறித்த பிச்சைக்காரர்கள் மெயின் வீதியை நோக்கி செல்கின்றனர்.

அங்கும் ஒரு பிச்சைக்காரருக்கு ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றது.

அங்கும் சுமார் 2000திற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.

இந்த பகுதிகள் மாத்திரமன்றி, டேம் வீதி, கதிரேசன் வீதி, புறக்கோட்டை பகுதி என அனைத்து பகுதிகளுக்கும் இந்த பிச்சைக்காரர்கள் சென்று யாசகத்தை பெறுகின்றனர்.

அவ்வாறென்றால், கொழும்பு புறக்கோட்டை பகுதியில் யாசகம் பெறும் ஒரு நபர், நாளொன்றிற்கு சுமார் 5000 ரூபாவிற்கும் அதிகமாக உழைப்பதை காண முடிந்தது.

குறிப்பாக வெள்ளிகிழமை நாளிலேயே வர்த்தகர்கள், யாசகம் கோருபவர்களுக்கு அதிகளவிலாக யாசகத்தை வழங்குகின்றனர்.

’தொழிலாக மாறி வருகிறது’

இந்து மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் செறிந்து வர்த்தகம் செய்யும் புறக்கோட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை புனித நாள் என்பதை கருத்தில் கொண்டு, யாசகத்தை பெறுவதற்காக அன்றைய தினம் அதிகளவில் யாசகம் பெறுபவர்கள் வருகைத் தருகின்றனர்.

வெள்ளிகிழமை நாளில் யாசகம் பெற வரும் பிச்சைக்காரருக்கு, குறித்த வர்த்தகர்களும் பணத்தை வழங்குவதை வழக்கமான விடயமாக கொண்டுள்ளனர்.

சில இடங்களில் யாசகர்களுக்கு உணவு வழங்குவதையும் காண முடிகின்றது.

இந்த நிலையில், ஏனைய நாட்களை விடவும் வெள்ளிகிழமை நாளில் யாசகம் பெறும் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக அந்த பகுதியிலுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிச்சைக்காரர்களுக்காகவே நாளொன்றிற்கு ஒரு தொகை பணத்தை ஒதுக்கி வைக்கும் செயற்பாடு வழக்கமான விடயமாகவுள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களை விடவும் அதிகளவிலான வருமானத்தை, பிச்சைக்காரர்கள் பெற்று வருவதாக புறக்கோட்டை பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

பலர் தற்போது இதனை ஒரு தொழிலாக செய்ய ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது எனவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து பிபிசி தமிழ், ராணுவ தளபதியிடம் வினவியப் போது, பிச்சைக்காரர்களின் பிரச்சனை சமூக பிரச்சனையாக மாறுமாக இருந்தால், தாம் அந்த விடயம் குறித்து அவதானம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

பிச்சைக்காரர்களின் பிரச்சனை தொடர்பில் ஆராய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version