கட்டுகஸ்தொட்ட பாலத்திலிருந்து ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை புகைப்படமெடுத்தாக கூறப்படும் 15 பேருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து , 2000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி காலை தற்கொலை செய்துக் கொள்வதற்காக குறித்த யுவதி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதை பாலத்தின் மேல் அமைந்துள்ள வீதியில் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களின் சாரதிகள் படம்பிடித்துள்ளதுடன் , இதன்போது போக்குவரத்து செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் வாகனங்களை வீதியில் நிறுத்தி வைத்துள்ளனர். சம்பவத்தின் போது 300 பேர் வரை இவ்வாறு புகைப்படம் எடுத்துள்ளனர்.
இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தி வைத்தமை தொடர்பில் 15 சாரதிகளை கைது செய்துள்ள பொலிஸார், அவர்களை 2000 ரூபாய் அபராதம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதுடன் , தமது பொறுப்பை மறந்து , ஏனையோறுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என்று எச்சரிக்கையும் செய்துள்ளனர்.