பிரிட்டனில் பிரிந்து சென்ற மனைவியை படுகொலை செய்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பிரிட்டனின் லெய்செஸ்டர் நகரில் வசித்து வருபவர் ஜிகுகுமார் சோர்த்தி (வயது 23). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து பாவினி பிரவின் என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் அவரை பிரிட்டனுக்கு அழைத்து சென்றார். ஆனால் இருவரும் தனித்தனி முகவரியில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி பாவினி பிரவின், ஜிகுகுமார் சோர்த்தியிடம் இருந்து நிரந்தரமாக பிரிந்துவிட்டதாக கூறி உள்ளார். திருமண உறவு முறிந்துவிட்டதாக பாவினியின் குடும்பத்தினரும் கூறி உள்ளனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த ஜிகுகுமார், மார்ச் 2ம் தேதி இரவு பாவினியின் வீட்டுக்கு சென்று இதுபற்றி பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜிகுகுமார், பாவினியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பாவினி, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

அதன்பின்னர் ஜிகுகுமார் போலீசில் நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு லெய்செஸ்டர் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, குற்றவாளி ஜிகுகுமார் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவித்த பிறகே, பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version