தாய்லாந்தின் இந்த பூங்காவில் நீங்கள் குப்பையை விட்டுச் சென்றால் அது உங்களை பின் தொடர்ந்து வரும்.
பின் தொடரும் என்றால் அது ஏதோ அமானுஷ்யம் அல்ல. அந்த குப்பைகள் உங்கள் வீட்டின் விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
நீங்கள் இயற்கையான இடத்தில் இருக்கும்போது குப்பை போடாமல் இருப்பதே நீங்கள் இந்த பூமிக்கு செய்யும் ஓர் நல்ல காரியம் என்று அதை பார்த்தவுடன் நீங்கள் புரிந்து கொள்ளலாம்,
பாங்காங்கிற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற கவ் யாய் தேசிய பூங்காவில்தான் இந்த கதை. அதாவது நீங்கள் அங்கு குப்பை போட்டால் அதன் அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு குப்பையை திருப்பி அனுப்புவார்கள். இந்த அறிவிப்பை தாய்லாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது எப்படி சாத்தியம் என உங்களுக்கு தோன்றலாம். அதற்காகதான் அங்கு வருபவர்களிடம் விலாசம் கேட்கப்படுகிறது.
அந்த பூங்காவில் விட்டுச் சென்ற குப்பைகள் உரியவர்கள் கொண்டு சேர்க்கப்படுவதற்கு தயாரான பார்சலை படம் பிடித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தாய்லாந்தின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்.
“உங்கள் குப்பை – உங்களுக்கு திருப்பி அனுப்புவோம்.” என எச்சரிக்கும் விதமாகவுள்ளது அந்த பதிவு.
மேலும் தேசிய பூங்காவில் குப்பை போடுவது தண்டைனைக்குரிய குற்றமாகும். மீறினால் ஐந்து வருட சிறைத்தண்டனையும், அபராதங்களும் விதிக்கப்படும் என்பதை நினைவூட்டுவதாகவும் உள்ளது அந்த பதிவு.
அந்த பார்சலில், பயன்படுத்தப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில்கள், தின்பண்டங்களின் கவர்கள் போன்ற காணப்படுகின்றன.
மேலும் அதில் “நீங்கள் இதை கவ் யாய் தேசிய பூங்காவில் விட்டுச் சென்றுவிட்டீர்கள்” என்றும் எழுதப்பட்டுள்ளது.
தேசிய பூங்காவில் குப்பைகளை விட்டுச் சென்றால் அதை விலங்குகள் உண்ணும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் பூங்காவின் அதிகாரிகள்.
தாய்லாந்தில் உள்ள இந்த கவ் யாய் தேசிய பூங்கா, 2,000 சதூர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. மேலும் இது சுற்றுலாப் பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இது தாய்லாந்தில் உள்ள பழமையான ஒரு பூங்காவாகும். இதன் நீர்வீழ்ச்சிகள், இங்குள்ள விலங்குகள், இயற்கை காட்சிகள் அனைத்தும் பிரசித்து பெற்றவை.