போராட்டக்காரர்கள் என்கிற போர்வையில் உள்ள ரவுடி கும்பல்கள் மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்கவில்லை என ஜனாதிபதி டிரம்ப் காட்டமாக கூறினார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவில் மாபெரும் போராட்டம் வெடித்தது.
‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்கிற பெயரில் அமெரிக்கா முழுவதும் இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் வன்முறையைக் கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த போராட்டத்தின் போது நாடு முழுவதும் உள்ள தலைவர்களின் சிலைகளை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
தலைநகர் வாஷிங்டனில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தியின் சிலையையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர்.
இந்தநிலையில் மின்னசோட்டா மாகாணத்தின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி டிரம்ப் போராட்டக்காரர்கள் என்கிற போர்வையில் உள்ள ரவுடி கும்பல்கள் மகாத்மா காந்தி சிலையை கூட விட்டு வைக்கவில்லை என காட்டமாக கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
அவர்கள் ஆப்ரகாம் லிங்கனை தாக்கத் தொடங்கினர். அப்போது அவர்களை பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
பிறகு ஜார்ஜ் வாஷிங்டனையும், தாமஸ் ஜெப்பர்சனையும் தாக்கினர். அனைவரையுமே தாக்கிவிட்டனர். மகாத்மா காந்தியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.
காந்தி அமைதியை மட்டுமே விரும்பினாரல்லவா? அவரை அவர்களுக்கு பிடிக்கவில்லை. உடனே காந்தியின் சிலையை சேதப்படுத்திவிட்டனர்.
என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவர்கள் இதையெல்லாம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ரவுடி கும்பல்கள்.
சிலைகளை சேதப்படுத்துவோரை 10 ஆண்டு சிறையில் அடைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டேன். அதன்பின் இப்போது சிலைகளை தாக்குவதை பற்றி யாரும் பேசுவதுகூட இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.