இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நேற்று சனிக்கிழமை காலையில் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். 

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்த செயற்பாடொன்றை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடந்த தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பங்கேற்றிருக்கவில்லை.

அக்கட்சிக்கான அழைப்பு மாவை.சோ.சேனாதிராஜாவின் புதல்வர் கலைஅமுதன் ஊடாக எழுத்துமூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதும் அக்கட்சியின் பிரதிநிதிகள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை.

எனினும் தமக்கான அழைப்பு கிடைக்கில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைவுக்கான அழைப்பு கடிதம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அது தலைவருக்கோ, செயலாளருக்கோ கிடைத்திருக்கவில்லை. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டமையும் தமதமாகவே அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாவை.சேனாதிராஜா தொலைபேசி ஊடாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை தொடர்பு கொண்டார்.

ஆரம்பத்தில் அவருடைய தொலைபேசியில் பதிவுசெய்யப்படாத இலக்கமொன்றிலிருந்து அழைப்பு வந்ததால் அதற்கு பதிலளிப்பதை கஜேந்திரகுமார் தவிர்த்திருந்தார்.

எனினும் பின்னர் மாவை.சேனாதிராஜாவின் குறுந்தகவலை அடுத்து நேற்று காலையிலேயே கஜேந்திரகுமார் மவை.சேனாதிராஜாவை அழைத்துள்ளார்.

அச்சமயத்தில் மாவை.சேனதிராஜாவிடமிருந்து பதில் கிடத்திருக்காத நிலையில் கஜேந்திரகுமாரும் பொருத்தமான நேரத்தினை அனுப்புங்கள் அழைப்பு எடுக்கின்றேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதன்பின்னர் மாவை.சோனாதிராஜா மீண்டும் அழைப்பு எடுத்தபோது கஜேந்திரகுமார் அதற்கு பதிலளித்து உரையாடியுள்ளார்.

இதன்போது அழைப்புக்கடித விவகாரம், மற்றும் பங்கேற்காமை தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சி.வி.கே.சிவஞானத்தின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நினைவு கூரும் உரிமைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தினை இறுதி செய்வதற்கான சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் சுகாஸ் மற்றும் காண்டீபன் ஆகியோர் பங்கேற்றிருந்ததோடு அக்கடிதத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version