விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சோழம்பூண்டி கிராமத்தில் 13 வயது சிறுமியை மாற்றுத்திறனாளி சிறுவன் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் சோழம்பூண்டி கிராமம் அருகே வசிக்கும் கட்டட தொழிலாளிக்குத் திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
இவரது மனைவி நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் வேலைக்குச் சென்ற கொண்டிருக்கிறார். வழக்கம்போல இன்று(வெள்ளிக்கிழமை) பெற்றோர் இருவரும் அவரவர் வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது இவர்களது 13 வயதுடைய 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் அதே பகுதியில் வாய் பேசமுடியாத மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட 16 வயதுடைய மாற்றுத்திறனாளி சிறுவன் வீட்டிலிருந்த சிறுமியிடம் விளையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மாற்றுத்திறனாளி சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுமியை திடீரென கையில் இருந்த கத்தரிக்கோல் மூலம் தாக்கியதாக தெரிகிறது.
இதனால் உடல் முழுவதும் காயம் மற்றும் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதால், சிறுமி மருத்துவமனை அழைத்துச் செல்லும் முன்பே உயிரிழந்து விட்டார்.
இதற்கிடையே மாற்றுத்திறனாளி சிறுவன் கத்தரிக்கோலால் தாக்கியபோது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது கையில் ரத்த கரையுடன் கத்தரிக்கோலுடன் நின்ற சிறுவனைப் பிடிக்க முற்பட்டபோது, சிறுவன் தப்பித்துச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக் சம்பவம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லசிவம் தலைமையிலான குழு நேரில் வந்து விசாரித்தது. இந்த நிலையில், தப்பிச் சென்ற சிறுவன் அருகிலுள்ள முட்புதரில் ஒளிந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து அவரை காவல் துறையினர் பிடித்தனர்.
சிறுமி கொலை
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், “கடந்த வாரம் எனது மகளிடம் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் தவறாக நடந்து கொள்ள முயன்றான். அப்போது அந்த சிறுவனைக் கண்டித்து அனுப்பி வைத்தேன்.
இந்நிலையில் இன்று(செப்டம்பர் 25) நானும் எனது கணவரும் வழங்கும் போல அவரவர் வேலைக்குச் சென்றுவிட்டோம். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த எனது மகளைச் சந்திக்கச் சென்ற அந்த சிறுவன், எனது மகளின் வாயில் துணியை வைத்து அடைந்து, கத்தரிக்கோல் கொண்டு தாக்கி இருக்கிறான்.
இதையடுத்து எனது மகளின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குச் சென்று எனது அண்ணன் பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் எனது மகள் இருந்தாள். உடனடியாக எனது அண்ணன் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் எனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மருத்துவர்கள் எனது மகள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சிறுவன் தாக்கியதில் எனது மகளின் தொண்டை, வயிறு, தொடை மற்றும் முதுகு பகுதிகளில் காயங்கள் இருந்தது. தற்போது எனது மகளைக் கொலை செய்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்,” என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சிறுமியின் வீட்டில் அவர்களது பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ளனர்.
அதையடுத்து சிறுமியின் வீட்டிற்கு விளையாடச் சென்ற சிறுவன், விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகச் சிறுமியைத் தாக்கியுள்ளார். இதனால் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி ஆவார். மேலும் அந்த சிறுவன் சிறிதாக மனநிலை பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,” என்று குறிப்பிட்டார்.