இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தொலைபேசி பதிவுகள் எதுவும் இருக்கவில்லை என கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போலீஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கிய போதே பூஜித் ஜயசுந்தர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தான் அப்போதைய பாதுகாப்பு செயலாளர், புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் நடத்தப்படுவதற்கு முந்தைய நாள் மாலை 5 மணியளவில், அரச புலனாய்வுத்துறையின் அப்போதைய பிரதானியான நிலந்த ஜயவர்தன தன்னுடன் தொலைபேசியில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த கலந்துரையாடல் 2 நிமிடங்கள் 13 நொடிகள் அமைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் தமக்கு கிடைத்த தகவல் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாக நிலந்த ஜயவர்தன, தன்னிடம் கூறியதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

வெளிநாட்டு புலனாய்வுத்துறையிடமிருந்தா மீண்டும் தகவல் கிடைத்தது என தான் அவரிடம் வினவிய போது, ஆம் என அவர் அதற்கு பதிலளித்திருந்ததாகவும் பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவிடம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரச புலனாய்வுத்துறை இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்களை திரட்டியுள்ளதா என தான் மீண்டும், நிலந்த ஜயவர்தனவிடம் வினவிய போது, தாம் சம்பவம் தொடர்பில் எந்தவித தகவல்களையும் திரட்டவில்லை என பதிலளித்;திருந்ததாகவும் போலீஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

இந்த கருத்தின் பிரகாரம், அரச புலனாய்வுத்துறை வேறொரு தரப்பின் தகவல்களை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டது என போலீஸ் மா அதிபர், ஆணைக்குழுவிடம் எடுத்துரைத்துள்ளார்.

அதையடுத்து, ஏப்ரல் 20ஆம் தேதி மாலை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தன்னிடம் தொலைபேசியூடாக அழைப்பை மேற்கொண்டு, நிலந்த ஜயவர்தன ஏதேனும் தகவலை வழங்கினாரா என வினவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆம், என கூறிய தான், அந்த விடயம் தொடர்பிலேயே ஆராய்ந்து வருவதாக பதிலளித்ததாகவும் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் இவ்வாறு பதிவாகிய நிலையில், பின்னரான ஒரு சந்தர்ப்பத்தில் சாட்சியம் வழங்க சென்ற போது, தான் அன்றைய தினம் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய விடயங்கள் எதுவும் தனது தொலைபேசி தரவு பட்டியலில் இருக்கவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் போலீஸ் மாஅதிபர் சாட்சி வழங்கியுள்ளார்.

தன்னுடைய தொலைபேசி தரவு பட்டியல் பதிவுகளை தவிர, ஏனைய அனைத்து தரப்பினரதும் தொலைபேசி தரவு பட்டியல்கள் அங்கு காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நிகழும் போது, ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பொறுப்பதிகாரியான அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த சகோதரரே செயற்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

தான் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்களையும் மேற்கொள்ளும் போது, தொலைபேசி அழைப்பில் ஒரு சத்தம் கேட்டதாக பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

தனது தொலைபேசி அழைப்புக்களை ஊடுறுவியிருந்தமையினாலேயே தொலைபேசி அழைப்பில் அவ்வாறு சத்தம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தனது வீட்டிற்கு முன்பாக அரச புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு, தன்னை அவதானித்து வந்திருந்ததாகவும் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீங்கள் யார் மீது குற்றம் சுமத்த முயற்சிக்கின்றீர்கள் என ஜனாதிபதி ஆணைக்குழு, கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போலீஸ் மாஅதிபரிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவருடன் தொடர்புடைய அரசியல் அதிகாரிகள் மீதே தான் குற்றம் சுமத்துவதாக நேரடியாக கூறியிருந்தார்.

இந்த ஈஸ்டர் தாக்குதலில் இறுதியில் தவறிழைத்தவர்களாக அப்போதைய பாதுகாப்பு செயலாளர் மற்றும் தன்மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஏன் இவ்வாறான விடயங்களை செய்தார் என நீங்கள் அறிவீர்களா என பூஜித் ஜயசுந்தரவிடம், ஆணைக்குழு அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், தன்னை பதவி விலக்க வேண்டும் என தனக்கு முன்பாகவே மைத்திரிபால சிறிசேன கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களானால், வெளிநாடொன்றின் தூதுவர் பதவி வழங்குவதாக உங்களிடம் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என கூறப்படும் கருத்து உண்மையா என ஆணைக்குழு பூஜித் ஜயசுந்தரவிடம் வினவியது.

அதற்கு பதில் வழங்கிய பூஜித் ஜயசுந்தர, ஆம் என குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 23ஆம் தேதி தன்னை சந்திக்குமாறு மைத்திரிபால சிறிசேன அழைத்திருந்ததுடன், தானும் அவரை சந்திக்க சென்றதாக அவர் குறிப்பிட்டார். ‘

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறும் தன்னிடம் மைத்திரிபால சிறிசேன கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அமைக்கப்படும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களானால், ஏதேனும் ஒரு நாட்டின் தூதுவர் பதவியை தருவதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளை சந்தித்தார்கள் – பூஜித் ஜயசுந்தர

தாஜ்சமுத்ரா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து, அது முடியாது போன சம்பவத்தை அடுத்து, தெஹிவளையில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்த ஜம்மில் மொஹமட் குறித்து சில முக்கிய தகவல்களை கட்டாய விடுமுறையிலுள்ள போலீஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவிடம் வெளிப்படுத்தினார்.

தாஜ்சமுத்ரா ஹோட்டலிலிருந்து தெஹிவளைக்கு வருகைத் தந்த ஜம்மில், 1.45 அளவில் முக்கியமான ஒருவரை சந்தித்துள்ளதாக பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

இலங்கை அரச புலனாய்வுத்துறையிலுள்ள அதிகாரியொருவரையே அவர் சந்தித்துள்ளமை தொடர்பில் தனக்கு பின்னர் தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஜம்மில் என்பவருடன் அரச புலனாய்வுத்துறைக்கு தொடர்புகள் இருந்திருக்குமானால், சஹரான் குறித்தும் தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாக பூஜித் ஜயசுந்தர கூறியுள்ளார்.

அரசியல் அழுத்தங்களை காரணமாகவே சஹரான் உள்ளிட்ட தரப்பினரை கைது செய்ய முடியாது போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு, பூஜித் ஜயசுந்தரவிடம் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் 28ஆம் தேதி வரை பிற்போடப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை அடுத்து அப்போதைய போலீஸ் மாஅதிபராக செயற்பட்ட பூஜித் ஜயசுந்தர, ஜனாதிபதியினால் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில், தொலைபேசி தரவுகள் அழிக்கப்பட்டுள்ளதாக பூஜித் ஜயசுந்தர சாட்சி வழங்கிய பின்னணியில், ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரிடம் விரைவில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூஜித் ஜயசுந்தர ஏன் கட்டாய விடுமுறையில் உள்ளார்?

இலங்கையில் உயர் பதவிகளிலுள்ளவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்டமொன்று காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.

சட்ட மாஅதிபர், பிரதம நீதியரசர், போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் பதவிகளிலுள்ளவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை எழுத்துமூலம் சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதன்பின்னர், சபாநாயகரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டு, அந்த விடயம் தொடர்பில் ஆராயப்படுவதுடன், அதில் குற்றம் சுமத்தப்பட்ட உயர் பதவியிலுள்ளவர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என சட்டத்தரணி கூறுகின்றார்.

குறித்த குழுவில் அவர் தவறிழைத்தவர் என அடையாளம் காணப்படும் பட்சத்தில், அந்த விடயம் நாடாளுமன்ற சபைக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.

உயர் பதவியிலுள்ளவர் குற்றம் இழைத்தார் என்பதை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினால் ஏற்றுக்கொள்வார்களாயினும், அது ஆவணம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உயர் பதவியிலுள்ளவர் பதவி விலக்கப்படுவார் என அவர் குறிப்பிடுகின்றார்.

எனினும், பூஜித் ஜயசுந்தர விடயத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்படாது, அவர் கட்டாய விடுமுறையில் மாத்திரமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version