தனது டுவிட்டர் ஊடகக் கணக்கினூடாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் மலசலகூடங்களை அமைப்பதற்கான நிதியுதவி கோரி காணொளியொன்றை அண்மையில் வௌியிட்டிருந்தார்.
அந்த கிராமத்துக்கே வெறும் இரண்டே இரண்டு மலசலகூடங்களே இருப்பதால் அம்மக்கள் பெரும் அவதிக்கும், சுகாதார சீர்கேட்டுக்கும் முகங்கொடுப்பதாக கோடிகாட்டிய அவர், குறைந்தது 10 புதிய மலசலகூடங்கள் கட்டுவதற்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியைக் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை அவர் வைத்ததன் பின்னர், இதற்கான எதிர்வினைகள் பல்வேறுபட்டனவாக இருந்தன.
சிலர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக “நல்லாட்சி அரசாங்கத்துக்கு” ஆதரவு வழங்கியதைச் சுட்டிக்காட்டி, ஏன் இதனை அப்போது செய்யவில்லை என்று கேள்வியெழுப்புகிறார்கள். வாஸ்தவமான கேள்வி.
கூட்டமைப்பு “நல்லாட்சி அரசாங்கத்துக்கு” ஆதரவு வழங்கியதைப் பற்றி பலருக்கும் இருக்கும் விமர்சனம் இது.
அந்த ஆதரவு நிபந்தனையற்ற ஆதரவாக அன்றி, அதனூடாக தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய நற்பலன்கள் சிலவற்றையாவது கூட்டமைப்பு பெற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை.
வசந்தபுரம் கிராமம் கடந்த ஐந்து வருடங்களாக அங்கேதான் இருந்தது. இந்த மலசலகூடப் பிரச்சினையும் அங்கேதான் இருந்தது.
யாழ். மாநகரசபையும் 2018ஆம் ஆண்டிலிருந்து த.தே.கூவின் ஆட்சியில்தான் இருக்கிறது. இத்தகைய சூழலில் இத்தனை காலம் கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்வி நியாயமற்றது என்று மறுதலித்துவிட முடியாது.
வேறு சிலரின் எதிர்வினை கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. இதை ஏன் நீங்கள் உங்கள் சொந்தக் காசில் செய்யக்கூடாதென சுமந்திரன் எம்.பியிடம் கேட்கிறார்கள். எவ்வளவு வேடிக்கையான கேள்வி.
அரசியல்வாதிகள் தமது சொந்தப் பணத்தை தானமளித்து அரசியல் செய்ய வேண்டுமென்ற அபத்தமான புரிதல் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஈகை என்பது ஒரு தனிமனிதனது தனிப்பட்ட விடயம். ஆனால் ஒரு மனிதன் பொது வாழ்க்கையில் இருப்பதன் காரணத்தால், அவர் கட்டாயம் கொடையாளியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எவ்வளவு அபத்தமானது.
வளர்ந்த நாடுகளில், அரசியல்வாதிகள்தான் மக்களிடமும், நிறுவனங்களிடமும் பணத்தைக் கொடையாகப் பெற்று தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் தெற்காசியாவில், அரசியல்வாதிகள் தமது சொந்தப் பணத்தை வாரியிழைத்து அரசியல் செய்ய வேண்டுமென்ற மனநிலை வேரூன்றியுள்ளது. இதன் முக்கிய விளைவுகளில் ஒன்று ஊழல்.
இலங்கையில் அனைவரும் வரி செலுத்துகிறார்கள், அந்த வரிப்பணத்தில் அரசாங்கம் இயங்குகிறது, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்படுகின்றன, பொதுநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆகவே, ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் தேவைகளும் அரசாங்கத்தினூடாக நிறைவேறச் செய்வதே.
மாறாக சொந்தக் காசில் அதனைச் செய்வது அல்ல. அப்படியானால், சுமந்திரன், ஏன் அரசாங்கத்திடம் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தினூடாகக் கொண்டு செல்லவில்லை அல்லது எம்.பியாக அவருக்கு கிடைக்கும் பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து இதனைச் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இதனைக் கூட சிலர் சுமந்திரனின் பதிவுக்கு எதிர்வினையாகப் பதிவுசெய்திருந்தார்கள்.
நாடாளுமன்றம் தற்போதுதான் கூடியிருக்கிறது. பாதீடு இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தினூடாகவோ, எம்.பியின் பரவலாக்கப்பட்ட நிதியினூடாகவோ இக்காரியத்தைச் செய்து முடிப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்படும்.
அரசாங்கம் இப்படியான ஒரு திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒரு செயன்முறைக் கட்டமைப்பு உண்டு. அதற்கு குறைந்தபட்சம் சில மாதங்களேனும் தேவைப்படலாம்.
இங்கு உடனடியாக, அவசரத் தேவையாக ஒரு 10 மலசலகூடங்களையேனும் கட்டுவதுதான் நோக்கமாக இருக்கிறது.
அதற்கு உதவி செய்யத் தயாரானவர்களின் உதவியைத்தான் அவர் வேண்டியிருந்தார். இந்த வேண்டுதலுக்கு மேற்சொன்னது போன்ற எதிர்மறையான எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டாலும் கூட. பல நேர்மறையான எதிர்வினைகளும் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக இலங்கையின் முக்கிய பங்குச்சந்தை வர்த்தகர்களுள் ஒருவரான நிமல் பெரேரா, டுவிட்டரினூடாகவே 10 மலசலகூடங்களுக்கான முழுக்கட்டுமானச் செலவையும் தான் ஏற்பதாக அறிவித்திருந்தார்.
மேலும் சிலரும் தாமும் பங்களிக்கத் தயாரென நேர்மறையான எதிர்வினையை வழங்கியிருந்தார்கள்.
ஆகவே, வசந்தபுரம் மக்களுக்கு விரைவில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். சுமந்திரனின் இந்த முன்னெடுப்பு பாராட்டுக்குரியதே.
ஆனால் இவையெல்லாவற்றுக்கும் இடையில், தமது மக்களுக்கு மலசலகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை சுகாதார உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய யாழ். மாநகர சபை தூங்கிக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அரசியலை தேசிய அரசியல் செய்பவர்கள் முன்னெடுக்கும் அதேவேளை, உள்ளூராட்சி அரசியல் செய்பவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமது கவனத்தைச் செலுத்துவதே பொருத்தமானது. இது தமிழ்த் தேசிய அரசியலின் இன்னொரு பிரச்சினையைக் கோடிகாட்டி நிற்கிறது.
இங்கு உணர்ச்சி பொங்க “பகட்டாரவாரப் பேச்சு” அரசியல் செய்பவர்கள் ஏராளமுளர், ஆனால் ஆட்சி மற்றும் நிர்வாகத் தேர்ச்சியுடையோர் சொற்பமே. இதற்கு முதலாவது வடக்கு மாகாண சபையே பெரும் உதாரணம். நிற்க.
சுமந்திரன் எம்.பியின் இந்தப் பதிவுக்கு வந்த இன்னொரு வகையான எதிர்வினையாது, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது, தமிழ் மக்கள் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்து எதிர்வினையாற்ற வேண்டியது.
சிலர், த.தே.கூ அபிவிருத்தி அரசியலை நோக்கித் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்கது. பிரிவினையைக் கைவிட்டுவிட்டு இதனை நீங்கள் முன்பே செய்திருக்க வேண்டும் என்று பதிவிடுகிறார்கள்.
இந்த “அபிவிருத்தி அரசியல்” என்ற சொல் பெருவாரியாகப் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இதனை பயன்படுத்துவோர் பயன்படுத்தும் நோக்கமும், உட்பொருளும் வேறாக இருக்கிறது.
சிலர் இதனை தமிழ்த் தேசிய அரசியலுக்கு மாற்றான அரசியலைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு கூட்டமைப்பு “தமிழ்த் தேசிய அரசியல்” கட்சி என்றும் டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் போன்றவர்கள் “அபிவிருத்தி அரசியல்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இது “தமிழ்த் தேசியமும்”, “அபிவிருத்தியும்” பரஸ்பரம் ஒன்றிலிருந்தொன்று விலகியது அல்லது பரஸ்பரம் ஒன்றுக்கொன்று முரணானது என்ற போலித்தோற்றத்தை ஸ்தாபிக்கிறது.
இந்தப் பொய் மீண்டும், மீண்டும் சொல்லப்பட்டு மக்கள் மனதில் ஆழமாகப் பதியப்பட்டுவிட்டது. அதனால் “தமிழ்த் தேசியம்” என்றால் அது ஏதோ அபிவிருத்திக்கு முரணானது அல்லது அதற்கும் அபிவிருத்திக்கும் சம்பந்தமில்லை என்ற தோற்றப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதற்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் முக்கிய காரணம்.
பல தசாப்தங்களாக “பகட்டாரவாரப் பேச்சு” அரசியலே நடத்தி பதவிக்கு வந்துவிட்ட அவர்கள், மக்களுக்கு “பட்டாரவாரத்தைத்” தாண்டிய எதனையும் வழங்காததன் விளைவுதான் தமிழ்த் தேசியம் என்பது அபிவிருத்தி சாராதது என்ற போலித்தோற்றம் வலுப்பெறக் காரணமாக இருக்கிறது. இந்தப் போலியெண்ணம் தமிழ் மக்களைத் தாண்டி, சிங்கள மக்களிடமும் வேரூன்றிவிட்டது.
அதனால்தான் ஒரு தமிழ்த் தேசிய அரசியல்வாதி அடிப்படை உட்கட்டுமானம் பற்றிப் பேசியவுடனேயே “தற்போதாவது பிரிவினையைக் கைவிட்டுவிட்டு, அபிவிருத்தி பற்றிப் பேசுகிறீர்களே” என்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி முன்வைக்கப்படுகிறது.
மறுபுறத்தில், டக்ளஸ் தேவனந்தா உள்ளிட்ட மேற்குறிப்பிட்டோர் செய்வது “அபிவிருத்தி அரசியலா” என்ற கேள்விக்கு, கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சொல்லும் வியாக்கியானம் இங்கு குறிப்பிடத்தக்கது.
அவர் அந்த அரசியலை “ஆதரவுத்தள அரசியல்” (patronage politics) என்கிறார். “அவர்கள் செய்வது அபிவிருத்தி அரசியல் அல்ல. அபிவிருத்தி என்பதற்கு ஆழமான புரிதலும் செயற்பாடும் தேவை.
ஆதரவுத் தள அரசியல் என்பது தம் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காக அங்கொரு வேலை இங்கொரு வேலையைப்பெற்றுக்கொடுத்தல், மின்சார இணைப்பு பெற்றுத் தருதல், வீட்டுத் திட்டத்துக்கு சிபாரிசு செய்தல் இப்படியான செயற்பாடுகள் மூலம் தமது ஆதரவுத் தளத்தை தக்க வைத்தல் எனப் பொருள் கூறலாம்.
ஒரு விதத்தில் பழைய “நல்ல ஜமீன்” அரசியல் போன்றது. இந்த ஆதரவு தளத்தை தக்க வைத்து அரசியல் செய்வது, அதிகாரத்தில் இருப்பது, வியாபாரம் செய்வது தான் இவர்களின் பிரதான நோக்கம்” என்கிறார் அவர்.
“அபிவிருத்தி அரசியல்” என்ற பொதுப்புழக்கத்திலுள்ள சொல்லின் பொருளைப் புரிந்துகொள்ள மேற்சொன்ன அனைத்தும் அவசியமானவை.
இது எல்லாவற்றிலும் மேலானது “தமிழ்த் தேசியம்” என்பது அபிவிருத்திக்கு எதிரானது என்ற மாயையைத் தகர்ப்பதாகும். தேசக்கட்டுமானத்தின் அடிப்படைகளில் ஒன்று அந்தத் தேசத்தின் அபிவிருத்தி.
அபிவிருத்தி என்பது வெறும் மலசலகூடம் கட்டுவதும், தார்வீதிகள் போடுவதுமல்ல. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத்தரம், உட்கட்மைப்பு வசதிகள், சுதந்திரம், மனித உரிமைகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதுதான் அபிவிருத்தி.
இனியும் வெறும் வாய்ச்சொல் வீரர்களாக தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் இருந்துவிட முடியாது. “தமிழ்த் தேசிய” அரசியல் அபிவிருத்திக்கு முரணானதோ, அபிவிருத்தி நீக்கம் செய்யப்பட்டதோ அல்ல என்பதையும், “தமிழ்த் தேசியமும்”, “அபிவிருத்தியும்” பரஸ்பரம் ஒன்றிலிருந்தொன்று விலகியது அல்லது பரஸ்பரம் ஒன்றுக்கொன்று முரணானது அல்ல என்பதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்கின்ற ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
– என்.கே. அஷோக்பரன்