விசுவாசம்… விசுவாசம்… என்று பேசுகிறீர்களே, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தீர்களே? என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அம்மா (ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு இந்த ஆட்சியும், கட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வந்தோம்.

இந்த சூழ்நிலையில் நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்தது.
நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று கடந்த 3½ ஆண்டுகளாக பல்வேறு இன்னல்கள், பிரச்சினைகளை எல்லாம் சந்தித்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றி வந்துள்ளேன்.

நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது கடும் வறட்சி நிலவியது. அதைத் தொடர்ந்து கடும் புயல்.

தற்போது கொரோனா போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் இந்த அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு மக்களை காப்பாற்றி வந்துள்ளது.

இந்த அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன. புதிதாக 6 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

நான் 1974-ம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கி, ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய செயலாளர், மாவட்ட பிரதிநிதி, மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்-அமைச்சர் என இந்த நிலைக்கு நான் உயர்ந்துள்ளேன்.

இதற்கு காரணம் நான் தலைமை மீது கொண்டுள்ள பற்றும், விசுவாசமும் தான். கடந்த 45 ஆண்டு காலமாக இந்த கட்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் விசுவாசத்துடன் பணியாற்றியுள்ளேன்.

2011-ம் ஆண்டு அம்மா (ஜெயலலிதா) என்னை நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக்கினார். என்னுடைய செயல்பாடுகளை பார்த்து கூடுதலாக 2016-ம் ஆண்டு பொதுப்பணித்துறையையும் வழங்கினார்.
அம்மாவின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு நான் சிறப்பாக பணியாற்றியதால் எனக்கு அந்த பொறுப்பை வழங்கினார். நான் ஒரே தொகுதியில் 9 முறை போட்டியிட்டுள்ளேன்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மிகச்சிறப்பாக அரசு செயல்பட்டதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

அப்படி என்றால், இந்த அரசு மக்களுக்காகத்தான் என்பதை நான் அல்லும்பகலும் பணியாற்றியதற்கு சான்றாக அமைந்துள்ளது. விசுவாசம்… விசுவாசம்… என்று சிலர் இங்கே பேசினார்கள்.

2017-ம் ஆண்டு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எனக்கு எதிராக, இந்த ஆட்சிக்கு எதிராக 11 பேர் வாக்களித்தீர்களே?. தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டீர்களே?. அதை எதில் சேர்த்துக்கொள்வது?.

அந்த சூழ்நிலையில் இந்த அரசு காப்பாற்றப்படாமல் இருந்திருந்தால் நம் அனைவருடைய நிலைமையும் என்ன ஆகியிருக்கும் என்பதை இந்த நேரத்தில் சிந்தித்து பார்க்க வேண்டும். அம்மாவின் ஆட்சிதான் தொடர்ந்திருக்குமா?.

நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால்தான் வருகின்ற தேர்தலில் மகத்தான வெற்றியை நாம் அடைய முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Share.
Leave A Reply

Exit mobile version