யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்த 15 பேர் தொடர்புகொண்டு தம்மை பாதுகாத்துக் கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

ஏனையவர்களும் வடமாகாண சுகாதாரத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்துடன் அல்லது பிரதேசத்தில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 3ம் திகதி இரவு 8.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து ரண்சிலு (Ransilu) எனும் NP 6503 இலக்கமுடைய தனியார் பேருந்தில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துள்ளார்.

அந்தப் பேருந்து புத்தளத்தில் பழுதடைந்த பின்னர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி வருகை தந்த பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை சாலைக்கு சொந்தமான NP 9776 இலக்க பேருந்தில் புத்தளத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு கொடிகாமத்தை 4ம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைந்துள்ளார்.

அதன் பின்னர் கொடிகாமத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்னொரு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 6.20 மணிக்கு NP 6508 இலக்க தனியார் பேருந்தில் புங்குடுதீவிற்கு பயணித்துள்ளார்.

மேற்படி பேருந்துகளில் இவருடன் பயணித்தவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தரவும்.

இதன் மூலம் தங்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும். இந்நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும் – என்றார்.

இந்நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version