கம்பஹா – மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் மேலும் 832 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தற்போது வரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மினுவாங்கொட, திவுலப்பிட்டி, வெயாங்கொட என்பவற்றோடு கம்பஹா பொலிஸ் பிரிவிற்கும் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கிடைக்கப் பெற்ற பி.சி.ஆர். முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 832 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதே வேளை அம்பாறை , அநுராபுரம் , பதுளை, கம்பஹா, அம்பாந்தோட்டை , யாழ்ப்பாணம், கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, பொலன்னறுவை, புத்தளம், வவுனியா ஆகிய பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் குறித்த ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிவதால் அவற்றுடனான தொடர்புகள் குறித்து ஆராயப்படுவதாகவும் வெவ்வேறு பிரதேசங்களிலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
ஊரடங்கு
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பிரதேசங்களுக்கும் இன்று மாலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இன்று மாலை 3 மணியளவில் அந்த அறிவித்தல் இரத்து செய்யப்பட்டு கம்பஹா பொலிஸ் பிரிவிற்கு மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்தது.
தனிமைப்படுத்தல்
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிபவர்களின் குடும்பத்தார் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அனைவரையும் நாட்டில் எந்த பிரதேசத்தில் இருந்தாலும் அவர்கள் இருக்குமிடங்களிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தோடு இது வரையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதற்காக உரிய தரப்பினர் அனைவரும் தயாராக வேண்டும் என்பதோடு அதற்கான அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழில்புரிபவர்கள் சொந்த இடங்களுக்கு செல்லக்கூடாது
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தொழிற்சாலைகளில் தொழில் புரிபவர்கள் தற்போது தங்கியுள்ள இடங்களிலிருந்து வெளியேற முடியாது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும் தொழிலாளர்களை அங்கிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பஸ் போக்குவரத்து
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளின் ஊடாக நீண்ட பிரயாணம் செல்லும் பஸ்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பொலிஸ் பிரிவுகளில் பஸ்களை நிறுத்துதல் , பயணிகளை இறக்குதல் அல்லது ஏற்றுதல் என்பவற்றை மேற்கொள்ள முடியாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
புகையிரத போக்குவரத்து
கம்பஹாவிலிருந்து வெயாங்கொட வரையான புகையிரத நிலையங்களில் மறு அறிவித்தல் வரை புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்படுவதோடு அதன் பின்னர் வெயாங்கொட புகையிரத நிலையம் வரை எந்த இடத்திலும் புகையிரதங்கள் நிறுத்தப்படமாட்டாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய வதுரம்ப – கம்பஹா புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட இந்தவொரு புகையிர நிலையத்திலும் புகையிரதங்கள் நிறுத்தப்பட மாட்டாது.