தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் தொடர்ந்தும் இருப்பார் என கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ள அதேவேளையில், பேச்சாளர் பதவிக்கு எஸ்.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடைய பெயர்கள் பிரேரரிக்கப்பட்ட நிலையில், முரண்பாடுகள் மேலோங்கியதால் பேச்சாளர் தெரிவு இன்றும் இடம்பெறவில்லை.

பேச்சாளர் தெரிவு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் எம்.ஏ.சுமந்திரனே அதுவரையில் தொடர்ந்தும் பேச்சாளராகச் செயற்படுவார் என கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பேச்சாளர் பதவிகளுக்கான தெரிவை மேற்கொள்வதற்காக கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு பாராளுமன்ற குழு அறையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் கூடியது.

இதன்போது கூட்டமைப்பின் தலைவராக இரா.சம்பந்தன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பேச்சாளர் தெரிவுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட போது, பேச்சாளர் பதவியில் தான் தொடர்ந்தும் இருக்க விரும்பவில்லை எனத் தெரிவித்த சுமந்திரன், பேச்சாளர் பதவிக்கு சிறிதரனின் பெயரைப் பிரேரித்தார். இதனை சாள்ஸ் நிமலநாதன் வழிமொழிந்தார்.

அதேவேளையில் செல்வம் அடைக்கலநாதனைப் பேச்சாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என வினோதாரலிங்கம் பிரேரித்தார்.

தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். தமது எதிர்ப்பைக் கடுமையாக வெளிப்படுத்தினார்கள்.

இதனால் உருவாகிய முரண்பாடுகளையத்து பேச்சாளர் தெரிவை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால், பேச்சாளர் தெரிவை சம்பந்தன் காலவரையறையின்றி ஒத்திவைத்தார்.

அதுவரையில் சுமந்திரனே கூட்டமைப்பின் பேச்சாளராகச் செயற்படுவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version