வெலிகந்தையில் அமைந்துள்ள கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 68 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், கம்பஹா உடப்பிட்டிய, வரலப்பன பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியரொருவரின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவல் காரணமாக கம்பஹா, மினுவாங்காடை மற்றும் மஹர பகுதிகளைச் சேர்ந்த சுமார் 80 பேர் நேற்றைய தினம் கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதன்போதே குறித்த வயோதிபப் பெண்ணும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் கொரோனா தொற்று அல்ல எனவும், மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.