இலங்கையின் பிரபல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ், போலீஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கி பிரயோகம் கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

சமரசிங்க ஆரச்சிகே மதுஷ் லக்ஷிக என்றழைக்கப்படும் மாகந்துர மதுஷ், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவலில் இருந்த நிலையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

போலீஸாரின் அனுமதியுடன் மாகந்துர மதுஷ், போதைப்பொருள் கடத்தல்காரர்களை மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் வருகைத் தருமாறு தொலைபேசியூடாக அழைத்துள்ளதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்படி, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில், மாகந்துர மதுஷ் மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த பகுதிக்கு வருகைத் தந்த திட்டமிட்ட குற்றங்களை செய்யும் குழுவொன்று, போலீஸ் அதிகாரிகளை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளது.

மாகந்துர மதுஷை காப்பாற்றும் நோக்குடனேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

இதையடுத்து, துப்பாக்கி பிரயோகம் நடத்திய குழு மீது, போலீஸ் அதிகாரிகள் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ள அதேவேளை, சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துர மதுஷ் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த போலீஸ் அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து 22 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள 22 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல்காரர்களினால் கொண்டு வரப்பட்ட 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யார் இந்த மாகந்துர மதுஷ்?

மாத்தறை – கம்புறுபிட்டிய பகுதியில் மாகந்துர மதுஷ் 1979ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.

மாகந்துர மதுஷ் சாதாரண கல்வி தகைமைகளை கொண்ட நிலையில், அவர் ஆரம்ப காலத்தில் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரரை சுட்டுக் கொன்ற இலங்கை போலீஸ்

2002ஆம் ஆண்டு அரச அதிகாரியொருவரை கொலை செய்ததன் ஊடாக அவர், நிழலுலக செயற்பாடுகளுக்குள் பிரவேசித்துள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொட பகுதியில் வைத்து 2005ஆம் ஆண்டு மாகந்துர மதுஷ், முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தவாறே தமது நிழலுலக குழு உறுப்பினர்களின் உதவியுடன் மற்றுமொரு கொலையை செய்ய 2006ஆம் ஆண்டு மாகந்துர மதுஷ் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 2006ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11ஆம் தேதி மாகந்துர பகுதியில் வைத்து அரசியல்வாதியொருவரை மதுஷ், தனது சகாக்களின் உதவியுடன் கொலை செய்துள்ளார்.

கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாகந்துர மதுஷ், பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

பல நாடுகளில் தலைமறைவாக இருந்து, இலங்கை மற்றும் சர்வதேச நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தும் பிரதான போதைப்பொருள் வர்த்தகராக மாகந்துர மதுஷ் மாறியிருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற பெரும்பாலான கொள்ளை, கொலை உள்ளிட்ட முக்கிய சம்பவங்களுக்கு மாகந்துர மதுஷ் தொடர்புப்பட்டுள்ளமை, போலீஸ் தகவல்களின் ஊடாக உறுதிப்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், சர்வதேச போலீஸாரின் உதவியுடன் மாகந்துர மதுஷ் 2019ஆம் ஆண்டு பெப்ரவர் மாதம் 4ஆம் தேதி துபாயில் வைத்து கைதுசெய்யப்படுகின்றார்.

அதன்பின்னர், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, அதே ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி மதுஷ், நாடு கடத்தப்பட்டு, இலங்கையில் கைது செய்யப்படுகின்றார்.

கடந்த ஒன்றரை வருட காலமாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலிருந்து மாகந்துர மதுஷை, கடந்த 16ஆம் தேதி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு தமது பொறுப்பிற்கு எடுத்தது.

குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அவரை தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், மறைத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருளை காண்பிப்பதாக தெரிவித்து மாகந்துர மதுஷ், போலீஸ் அதிகாரிகளை மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்து சென்ற நிலையிலேயே, இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

போலீஸார் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர்களை கைது செய்வதற்காக, பல விசேட போலீஸ் குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி போலீஸ் மாஅதிபரும், போலீஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version