நாட்டில் இன்றைய தினம் 50 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவல் ஆரம்பமாகியதிலிருந்து 2,500 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களில் 22 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள இரண்டு தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர்.

ஏனைய 22 பேர் மினுவாங்கொடை தொழிற்சாலையின் ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்றும் எஞ்சிய ஆறு பேரும் பேலியகொட மீன் சந்தையில் இருந்த ஆறு நபர்கள் என்றும் கூறப்படுகிறது.

தற்போது மினுவாங்கொடை கொத்தணி பரவிலில சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 2,558 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயளர்களின் எண்ணிக்கை  6,028 ஆக உயர்ந்தது.

இதேவேளை முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளான 60 நபர்கள் குணமடைந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு வெளியேற்றப்பட்டமையினால், குணமடைந்தோர் தொகையும் 3,561 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போது 14 வெளிநாட்டினர் உட்பட 2,454 கொவிட்-19 நோயாளிகள் நாடு முழுவதும் 23 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 341 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version