விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொலைசெய்ய முயன்றமை தொடர்பான வழக்கை இரத்துச்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்த வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வி.கே.டி.பாலன் மீதான வழக்கை இரத்துச் செய்யவே இவ்வாறு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தை கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985ஆம் ஆண்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் எவரும் காயமடையாத நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகியதுடன் ரஞ்சன், மணவை தம்பி ஆகியோர் இறந்துவிட்டனர்.

அத்துடன், இராதாகிருஷ்ணன் குற்றத்தினை ஒப்புக் கொண்டு அரச தரப்புச் சாட்சியாளராக மாறிவிட்ட நிலையில் வி.கே.டி பாலன் மட்டும் இந்த வழக்கை எதிர்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் 30 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த வழக்கில் பாலசிங்கம் உள்ளிட்ட பல முக்கிய சாட்சிகள் இறந்துவிட்டதால் தனக்கு எதிரான வழக்கை இரத்துசெய்ய வேண்டும் என வி.கே.டி.பாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இதுகுறித்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாலசிங்கம் இறந்துவிட்டார் என்பதற்காக இந்த வழக்கை இரத்துச்செய்ய முடியாது எனவும், உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலமாக வழக்கை நிரூபிக்க முடியும் என்றும் அறிவித்தார்.

மேலும், நீண்ட காலதாமதம், ஆவணங்கள் காணமல் போனமை ஆகியவை வழக்கை இரத்துச் செய்வதற்கு நல்ல காரணம் அல்ல எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் நடைமுறையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என சைதாபேட்டை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

அத்துடன், அமர்வு நீதிமன்றம் ஆவணங்களை பெற்று சட்டப்படி விசாரணை நடைமுறைகளைத் தொடங்க உத்தரவிட்ட நீதிபதி, வி.கே.டி.பாலனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version