படிக்க வைத்து ஆளாக்கிய தனக்கு துரோகம் செய்துவிட்டதாக காதலன் மீது திராவகம் வீசிய இளம்பெண் பற்றிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவை மிஞ்சும் இந்த ருசிகர சம்பவம் திரிபுராவில் நடந்தது. அங்குள்ள கோவாய் நகரம் அருகே உள்ளது பெல்சேரா கிராமம். இங்கு வசிக்கும் சவுமென் சந்தல் (வயது 30) என்பவர் காயங்களுடன் அகர்தலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ‘ஆசிட்’ (திராவகம்) தாக்குதலில் காயம் அடைந்து மூக்கு, கண் மற்றும் சுவாசக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இதுபற்றி அவரது சகோதரர், அண்ணனின் பெண் தோழியான பினட்டா சந்தல்(27) திராவகம் வீசியதாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் பினட்டாவை பிடித்து விசாரித்தபோது பினட்டா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தோம். கடந்த 2 வருடங்களாக சவுமென் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார். என்னை திருமணம் செய்யவும் சம்மதிக்கவில்லை.

நாங்கள் பள்ளிப்பருவம் முதலே காதலித்தோம். அவர் பிளஸ்-2 படித்த பின்பு மேற்படிப்பு படிக்க சிரமப்பட்டார். நான் 8-ம் வகுப்பு படித்த பின்பு, பல இடங்களில் பாத்திரம் தேய்த்து, கூலி வேலை செய்து பணம் அனுப்பி அவரை படிக்க வைத்தேன்.

2018-ல் பட்டப்படிப்பை முடித்த சவுமென், வேலைக்கு சேர்ந்ததும் என்னிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதையும் அறிந்து ஆத்திரம் அடைந்தேன். அதனால் அவரின் துரோகத்திற்கு பழிதீர்க்க திராவகம் வீசினேன்.

இவ்வாறு பினட்டா கூறி உள்ளார். பினட்டாவை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version